தென் தமிழகத்தில் டிசம்பர் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் கன மழை பெய்யும் - இந்தியா வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடலில் மேற்கு நோக்கி மெதுவாக நகர வாய்ப்புள்ளது. மேலும் இதன் காரணமாக தென் தமிழகத்தில் டிசம்பர் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடாவில் மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. அதே போல் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது, மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 06 மணி நேரத்தில் 14 கி.மீ வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இது 62.201 கி.மீ தூரத்தில் மேற்கு மத்திய அரபிக்கடலில் மையம் கொண்டிருந்தது.
கோவா மேற்கு-தென்மேற்கே 1260 கிமீ தொலைவிலும், ஓமன் கிழக்கு-தென்கிழக்கே 9:30 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில்மேற்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது.
மீனவர்கள் எச்சரிக்கை:
மீனவர்கள் டிசம்பர் 17 ஆம் தேதி வரை மேற்கு மத்திய மற்றும் தென்மேற்கு அரபிக்கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
18.12.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
19.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
20.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.