சென்னை புறநகர் பகுதி அதிதீவிர வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறது. அறிவை வளர்ச்சியை நோக்கி செல்லும் சென்னை புறநகர் பகுதிகளில் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. போதைப் பொருள் ஒரு மனிதனுக்கு அறிமுகமாகும் பொழுது, அந்தப் பொருள் ஏதோ, தேவாமிர்தம்போல் தெரியும். ஆனால் போகப் போக அவன் மனநிலையை மாற்றி, உடலையும் சீர்கெடுத்து சம்பந்தப்பட்ட நபரின் வாழ்க்கையை கேள்விக்குறியாகும் அளவிற்கு போதை பொருட்கள் கொண்டு சென்று விடும். ஆனால் அரசு எச்சரிக்கைகளையும் , மீறி பல தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், சென்னை புறநகர் பகுதிகளில் சர்வசாதாரணமாக கிடைக்கிறது என குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது.



 

தொடர் கண்காணிப்பு பணி 

 

 சென்னை புறநகரில் முக்கியமாக கிடைக்கக்கூடிய கஞ்சா, உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை தடை செய்ய மக்கள் கூடும் பகுதிகளிலும், காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எந்தெந்த இடங்களில் எல்லாம் போதைப் பொருட்கள், புழங்குகிறதோ அங்கெல்லாம் தீவிர வேட்டை நடத்தி, போதைப் பொருள் நடமாட்டத்தை குறைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தாம்பரம் அடுத்து பெருங்களத்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் தாம்பரம் மதுவிலக்கு போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

 

10 கிலோ கஞ்சா

 

அப்போது, கையில் பெரிய பையுடன் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். சம்பந்தப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த பொழுது,  அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால், அவரது பையை காவல்துறையினர் சோதனை செய்தபோது கிலோ கணக்கில், கஞ்சா இருந்ததால், அவரை பீர்க்கங்கரணை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 



 

மன அழுத்தத்தை போக்க கஞ்சா

 

விசாரணையில், அவர் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த தனிஷ் (29) எனவும், தான் யோகாசன , கலையில் முதுகலை பட்டம் பெற்றவர் எனவும், பாலவாக்கம் பகுதியில் தங்கி சென்னை, வேளச்சேரி, நீலங்கரை, துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்களில் யோகாசன ஆசிரியராக பணி செய்து வந்ததாகவும், தன்னிடம் மன அழுத்தத்தையும், உடல் எடையையும் குறைக்க வரும் மென்பொருள் நிறுவன ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட நபர் மீது பீர்க்கங்காரனை போலீசார் வழக்கு பதிவு, விசாரணை நடத்தி தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

தன்னிடம் நல்லொழுக்கத்தை கற்றுக்கொள்ள வந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களை பயன்படுத்தி கஞ்சா விற்றுவந்த யோகா ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த வகையில் ஒருவன் போதை எடுத்துக்கொண்டாலும், அது மனதிற்கும், உடலுக்கும் தீங்கு என தெரிந்து இருந்தும், இளைஞர்கள் இதுபோன்ற வழியில் செல்வது தவறு என காவல்துறையினர் கூறுகின்றனர்.