தெற்கு அந்தமான் கடலில் வரும் 5 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கூறப்பட்ட நிலையில், வரும் 4 ஆம் தேதி சூறாவளி சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு தகவல் தெரிவித்துள்ளது. இது  தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் வரும்  டிசம்பர் 5 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. 


மேலும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, அது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8 ஆம் தேதி தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை அடையும். 


இதன் காரணமாக அடுத்த 4-5 நாட்களுக்கு கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவுகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். டிசம்பர் 3, 2022 அன்று தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு  காரணமாக, நாளை:  தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


04.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.


05.12.2022: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


04.12.2022: அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


05.12.2022: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65   கிலோ மீட்டர் வேகத்திலும் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரையிலும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.


தமிழகம் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் கடந்த வாரம் நவம்பர் 17 முதல் 23 வரை வடகிழக்கு பருவமழை வெகு குறைவாக இயல்பை விட பதிவாகியுள்ளது.


இயல்பான மழை அளவு 34 மில்லி மீட்டர் ஆனால் தற்பொழுது பதிவான மழையின் அளவு 3 மில்லி மீட்டர் 91% குறைவாக மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.