தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், சில தினங்களாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தது. சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் காலை வரை நல்ல மழை பெய்தது. வெயில், அனல் காற்றில் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு, இந்த மழை குளிச்சியை கொடுத்து மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






இந்நிலையில், தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், தருமபுரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில்  இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக் கூடும். கோவை, சேலம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. பிற மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 17ஆம் தேதி முதல் படிப்படியாக மழை குறையும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




 


மேலும், தமிழக கடலோர பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், அந்த பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.