இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வரவேற்பையும் விமர்சனத்தையும் ஒருசேர பெற்று திரையரங்கில் வெற்றி நடைபோட்டு கொண்டிருக்கும் கர்ணன் திரைப்படத்தின் மையப்புள்ளி கொடியன்குளம் கிராமத்தில் அரங்கேறிய கலவரம். 

அங்கு அப்படி என்னதான் நடந்தது ? கொடியன்குளம் கிராமத்தில் அன்றைய மக்களின் மனநிலை என்னவாக இருந்தது ? என்பதை குறித்து அறிய ‛ABP நாடு’ நெல்லைக்கு பயணித்தது.

கலவரத்தின் போது அதுகுறித்த பல செய்திகள் மற்றும் கட்டுரைகளை களத்தில் இருந்து வழங்கிய இதழாளர் ஐ. கோபாலசாமி (ஐ. கோ)  அவர்களின் இல்லத்தை தேடி சென்றோம். 



 

திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கே உரித்தான நெல்லை தமிழில் நம்மை வரவேற்றார். நம் வருகைக்கான நோக்கம் என்ன என்பதை அவர் முன்னிலையில் வைத்தோம். அவருடன் சேர்ந்து நாங்களும் கொடியன்குளத்தை நோக்கிய உண்மை கதை களத்தில் பயணிக்க ஆரம்பித்தோம். இனி கோபாலசாமியின் அனுபவம் பேசும்.

 

‛‛1990 களின் பிற்பகுதியில் பட்டியலின மக்களின் பிரச்சனைகள் அதிகபடியாக கிளர்ந்தெழுந்தது. அவர்களின் எழுச்சிகளை விரும்பாத சில சக்திகள் அவர்களை அடக்கி ஆள நினைத்தன. 1992க்கு பிறகு மணியாச்சி கலவரம், நாரைக்கிணறு கலவரம் என்று பல கலவரங்கள் தலை தூக்கின. 1995க்கு பின் வீரசிகாமணி என்ற ஊரின் அருகே பள்ளி மாணவர்களுக்கும் அரசு பேருந்து ஊழியர்களுக்கும் கைகலப்பு ஏற்படவே சில சாதிய தலைவர்கள் சிலைகள் அங்கு சேதமாக்கப்பட்டது. இதனால் அங்கும் கலவரம் வெடித்தன. இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

 

அரசாங்கத்திற்கும் ஆளும் வர்க்கத்திற்கும் இதில் நேரடி தொடர்பு உண்டு என்று பாகிக்கப்பட்ட மக்களின் கருதினர். இவ்வாறாக  திரும்பும் இடம் எங்கும் கலவரம் என்று நெல்லை மாவட்டமும் அப்போதைய சிதம்பரானர் மாவட்டம் என்று சொல்லக்கூடிய தூத்துக்குடி மாவட்டமும் திக்குமுக்காடியது. 



 

வட மாவட்டங்களில் பிரச்னைகள் ஒன்றன் பின் ஒன்றாக தலை தூக்க கொடியன்குளம் அருகே பலவேசம் என்பவர் முன் விரோதம் காரணமாக கடுமையாக தாக்கப்பட்டார். பின்பு அதன் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு என்ற ஊரின் அருகே இருவர் கொலை செய்யப்படுகிறார்கள். அதில் முகாந்திரமாக யார் இருப்பார்கள் என்று போலீசாரும் அப்போதைய மாவட்ட ஆட்சியர் பன்னிர்செல்வம் நேரில் விசாரிக்க செல்கிறார்கள். 

விசாரிக்க சென்ற ஆட்சியரும், போலீசாரும் அப்போது பெரிய படையுடன் திடுத்திடுவென கொடியன்குளம் கிராமத்தில் புகுந்தார்கள். விவசாயம், கூலி வேலை, கிராமத்து தின்ணையில் ஓய்வு என்றிருந்த பாமர மக்களுக்கு போலீசாரின் படைகளை பார்த்ததும் ஒன்றும் புரியவில்லை. போலீசாருடன் ஒரு சில செக்கியூரிட்டி பணியாளர்களும் கிராமத்தில் புகுந்தனர்.

 

கொடியன்குளம் கிராம மக்களின் ஒரு சிலர் வெளிநாடுகளில் வேலை செய்து கொஞ்சம் சம்பாதிக்க துவங்கிருந்த கால கட்டம் அது. அப்போது வட மாவட்டங்களில் நடந்த பல கலவரங்களுக்கு இங்கே இருந்து நிதி உதவிக்கு பணம் ஏதும் செல்கின்றனவா என்ற ஒரு பெரிய கேள்வியும், சந்தேகமும்  போலீசார் மத்தியில் இருந்தது. வல்லநாடு பகுதியில் இருவர் கொலை செய்யப்பட்ட காரணத்தால் அந்த ஆத்திரமும் போலீசாருக்கு இருந்தது. 



 

கிராமத்தில் புகுந்த போலீசார் எந்த முன்னறிப்பும் இன்றி சடாரென பொது மக்களை நோக்கி அடிக்க துவங்கினர், வீடுகளை நொறுக்கி சேதப்படுத்தினர் அதுமட்டுமல்லாது கிராம மக்களின் குடிநீர் கிணற்றில் டீசலை கலந்த கொடுமையையும் நிகழ்த்தினர். பள்ளி மாணவியர் இருவரின் மார்பில் துப்பாக்கி வைத்து குத்தினர். ஊரே கலவர பூமியானது. திரும்பும் இடமெல்லாம் மரண ஓலம், கதறல், கண்ணீர் என்று கொடியன்குளம் கிராமமே ஸ்தம்பித்தது.

 

தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஒரு சிலர் வீட்டின் உள்ளே சென்று தாழிட்டு கொண்டனர். ஆனாலும் போலீசாரின் பூட்ஸ் பாதங்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே ஏறியது. பெண்கள், வயதானோர் என்று யாரையும் பார்க்கவில்லை. எல்லோருக்கும் அடி உதை, மிதிதான். தனது மக்கள் என்றும் பாராமல் கொடூர தாக்குதல்களை நிகழ்த்தியது அதிகாரவர்க்கம்.

 

அதன் முன்பு வரை நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த கலவரம் என்பது இரு சாதி மக்களுக்குள் நடந்த பிரச்சனையாகதான் இருந்தது. ஆனால் கொடியன்குளத்தில் நடைபெற்ற கலவரம் என்பது அரசாங்க அதிகார அடக்குமுறையாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்வளைகளை நெறிக்கும் விவகாரமாகவும் மாறியது. 

 

இது வன்முறை நாடே திரும்பி பார்க்கும் அளவிற்கு பூதாகரமாக உருவாகி,  நீதி விசாரணை வரைக்கும் சென்றது. அப்போது போலீசார் கூட அந்த குற்றத்தை ஒப்புக்கொண்டனர். ஆனால் அரசு இறுதி வரை நடந்த சம்பவத்தை பெரிதாக பொருட்படுத்தவே இல்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை. இறுதியில் பல தலைவர்கள் ஒன்றிணைந்து கொடியன்குளத்தில் நடந்த பிரச்னைக்கு நிவாரணம் வாங்கி கொடுத்தார்களே தவிர நீதி இன்றளவும் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் அவர்களிடம் உள்ளது. 



 

கர்ணன் திரைப்படத்தை இரு சமூக பிரச்சனைகளை சித்தரித்து சொல்லிருப்பார்கள் என்று நினைத்தேன் ஆனால் கொடியன்குளத்தில் நடந்த அரசாங்க அடக்குமுறை குறித்து அழகாக எழுதி உள்ளார் இயக்குனர் மாரி. கர்ணன் திரைப்படமும், கொடியன்குளம் சம்பவமும் ஒன்றிணைத்து பார்த்தால் கலவரத்திற்கு பிறகு கொடியன்குளம் மக்கள் வாழ்வாதாரம் இழந்து அவதிப்பட்டனர். வழக்குகள் போட்டு மக்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள் இதனால் பல குடும்பங்கள் கிராமத்தை விட்டு ஓடி ஒழிய வேண்டிய சூழல் உருவானது. 



ஆனால் கர்ணன் திரைப்படத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் கொலை செய்யபடுகிற மாதிரியான காட்சியில் நடிகருக்கு சிறைத்தண்டனை மட்டும் கொடுத்து விடுதலை செய்யப்பட்டது நம்பகமானதாக இல்லை.

 

நிஜத்தில் அதுபோன்ற சம்பவம் நடந்திருந்தால்,  அந்த இளைஞர் கைது செய்யப்படுவதற்கு முன்னரே படுகொலை செய்யப்பட்டிருப்பார்.  இல்லையெனில் காவல்துறையின் உச்சபட்ச கொடுமைகள் சிறையில் அரங்கேறியிருக்கும், என, நடந்தவற்றை  பின்னோக்கி சென்று நம் முன் கொண்டு வந்த கோபாலசாமியும் இன்னும் கொடியன்குளம் சம்பவ நினைவுகளில் இருந்து மீண்டுவிடவில்லை.