புதுச்சேரி: கனமழை எச்சரிக்கை காரணமாக காரைக்கால் இன்று (17/11/25) காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் விடுமுறை என கல்வி துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைதென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை தெரிவித்துள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்நிலையில் காரைக்கால் பகுதிகளுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (17/11/25) காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி கல்வி அமைச்சர் ஆ. நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று திங்கட்கிழமை(17/11/25) காரைக்காலில் உள்ள அனைத்து அரசு பள்ளி, அரசு நிதி உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம் எச்சரிக்கை:
வானிலை மையத்தின் அறிக்கையின்படி, இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக்கூடும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்:தமிழ்நாட்டில் இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு. திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம். திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி. திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கணமழை பெய்யவாய்ப்புள்ளது.
அடுத்த மூன்று நாட்களுக்கான வானிலை அறிக்கை:
18-11-2025: தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
19-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
20-11-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர்,மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
21-11-2025 மற்றும் 22-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.