"பீகாரில் வென்றது அயோக்கியன் கூட்டணி!': பாஜக யுக்தி தமிழகத்தில் எடுபடாது. ரூ. 12,100 கோடி செலவழித்து வெற்றி: வளர்ச்சித் திட்டங்கள் இல்லை; பீகார் தேர்தலை சாடிய துரை வைகோ"
பல்நோக்கு கட்டிடம் திறப்பு விழா
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வின் மாநிலங்களவை உறுப்பினர் நிதியிலிருந்து காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அங்கம்பாக்கம் ஊராட்சியில் கட்டப்பட்ட பல்நோக்குக் கட்டிடம் இன்று திறப்பு விழா கண்டது. இந்த விழாவில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக தலைமை நிலைய செயலாளருமான துரை வைகோ கலந்துகொண்டார்.
பீகார் தேர்தல் துரை வைகோ விமர்சனம்
விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ, அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசினார். அண்மையில் நடைபெற்ற பீகார் சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், "பீகார் தேர்தலில் பாஜக வெற்றியடைந்ததைப் போல், பேரறிஞர் அண்ணா மற்றும் பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் அது எடுபடாது," என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். பீகார் தேர்தல் குறித்துப் பேசுகையில், வடமாநிலங்களில் கடந்த தேர்தலைப்போல் இல்லாமல், பீகார் மாநிலத்தில் ஒரு கோடி 25 இலட்சம் பெண்களுக்கு தேர்தலுக்கு முன்பு ₹10,000/- வழங்கி உள்ளதாகவும், தேர்தலுக்காக ₹12,100 கோடி செலவு செய்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பீகாரில் தொழிற்சாலைகளோ, கல்வி வசதியோ இல்லாத நிலையில், இந்த பெரும் தொகையை வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல் பாஜக அரசு தேர்தலுக்காக செலவழித்துள்ளதாகக் கூறிய அவர், இதேபோன்றுதான் மகாராஷ்டிரா தேர்தலும் நடந்துள்ளது என்று சுட்டிக்காட்டினார். மேலும், பீகாரில் வென்றது தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அல்ல என்றும், அது 'மகா அயோக்கியன் கூட்டணி' என்றும், இதன் மூலம் பெரும் ஜனநாயகம் தோல்வி அடைந்துள்ளதாகவும் அவர் கடுமையாகச் சாடினார்.
விஜய் பாஜகவை ஆதரிக்கக் கூடாது
இதுபோன்ற பாஜக-வின் யுக்தி தென் மாநிலங்களில் எடுபடாது என்றும் துரை வைகோ வலியுறுத்தினார். அரசியல் பிரவேசம் குறித்துப் பேசும் நடிகர் விஜய் பற்றி பேசிய அவர், "நடிகர் விஜய் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரம்; அவர் பின்னால் இலட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். ஆனால், சினிமா வேறு அரசியல் வேறு," என்று வேறுபடுத்திக் காட்டினார்.
விஜய் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் நேரடியாக அவர் கலந்துகொண்டால் தான் அவர் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், விஜய்யின் கட்சிக்கு கொள்கை ரீதியாக எதிரியான பாஜக, தமிழகத்தில் வளர்வதற்காக, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாஜகவிற்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்றும் துரை வைகோ வேண்டுகோள் விடுத்தார்.
காஞ்சிபுரம் அடுத்த அங்கம்பாக்கம் ஊராட்சியில் பன்நோக்குக் கட்டிடம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட பின்பே மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ இந்தச் செய்தியாளர் பேட்டியை அளித்தார்.