தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக சேலம், கோவை, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், வடகடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. 


நாளைய தினம் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, மாவட்டங்கள், வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யகூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ஜூலை 29 முதல் 31 ஆம் தேதி வரை கோவை, நீலகிரி மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஷியஸை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கடந்த 24 மணிநேரத்தை பொருத்தவரை, கடலூர் மாவட்டம் புவனகிரியில் 8 செ.மீ, நாமக்கல் மாவட்டம் மங்களபுரம், சேலம் மாவட்டம் ஆத்தூரில் தலா 5 செ.மீ, சென்னை மாவட்டம் பெரம்பூர், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம்,பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிக்காடு ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ , கடலூர் மாவட்டம் சிதம்பரம், திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் தலா 3 செ.மீ, நீலகிரி மாவட்டம் தேவலா, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், சேலம், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், நீலகிரி மாவட்டம் நடுவட்டம், திருவள்ளூர் திருவலங்காடு, கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, கோவை மாவட்டம் சோலையார், சின்னக்கல்லார் 2 செ.மீ பதிவாகி உள்ளது. 


வங்கக்கடல் பகுதிகளான தமிழ்நாடு-ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும், வடகிழக்கு வங்க கடல், மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.


மேலும், ''நாளை மற்றும் நாளை மறுநாள் தினம், மத்திய வங்க கடல், வடக்கு வங்ககடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். அரபிக்கடல் பகுதியை பொருத்தவரை வரும் 29 முதல் 31 ஆம் தேதி வரை கர்நாடக கடலோர பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை வீசக்கூடும். நாளை முதல் 31ஆம் தேதி வரை தென்மேற்கு, வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 50 சதவீதம் வரை வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளது.