தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு கழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 14-ஆம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும். வரும் 15, 16 ஆம் தேதி வாக்கில், வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும்.


13.10.2024:


தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.


தஞ்சாவூர். திருவாரூர், மதுரை, தேனி மற்றும் விதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், புதுக்கோட்டை நாகப்பட்டினம், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமமையும் பெய்யவாய்ப்புள்ளது.


காஞ்சிபுரத்தில் மழை


அதன்படி காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பேருந்து நிலையம், செவிலிமேடு, ஓரிக்கை, சின்ன காஞ்சிபுரம், நத்தப்பேட்டை, பெரியார் நகர், ஓலிமுகமது பேட்டை, கீழம்பி, களக்காட்டூர், குருவிமலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.


செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?


செம்பரம்பாக்கம் ஏரி 24 அடியில் தற்போது 13.16 அடியாக நீரின் அளவு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 1.2 டிஎம்சி நீர் தற்போது கையெழுப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து மழை காரணமாக 250 அடியாக அதிகரித்துள்ளது.. ஏரியிலிருந்து மெட்ரோ குடிநீர் உள்ளிட்ட பணிக்காக 134 கன அடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் 13 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 


பிற ஏரிகளின் நிலவரம் என்ன ?


செங்குன்றம் ஏரியில் 14.97 அடியாக நீரின் அளவு உள்ளது. இரண்டு டிஎம்சி நீர் கையிருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 197 கன அடியாக இருந்து வருகிறது. 


சோழவரம் ஏரி 18 அடியில் 0.23 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரி 35 அடியில் 20 அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து 480 கன அடியாக அதிகரித்து வருகிறது. வீராணம் ஏரி 15 அடியில் 13 அடியை எட்டியுள்ளது. வீராணம் ஏரி நீர்வரத்து அதிகரித்திருப்பதால், 1296 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது‌. 426 கன அடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.


மழை தொடங்கியுள்ளதால் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கக்கூடிய ஏரிகளை பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியை தொடர்ந்து கண்காணித்து, தேவைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செம்பரம்பாக்கம் ஏரிக்கு முக்கிய நீர் வரத்தாக இருக்கக்கூடிய ஏரிகள் நிரம்பாததால், செம்பரம்பாக்கம் ஏரி உடனடியாக நிரம்புவதற்கான வாய்ப்புகள் குறைவு என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருந்தும் தொடர்ந்து செம்பரம்பாக்கம் உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் கண்காணிப்பில் இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.