தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த சூழலில், வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளதால் சென்னையில் இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.



சென்னைக்கு ரெட் அலர்ட்:


சென்னையில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதுடன் நாளை மறுநாள் சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை , திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும் வரும் 16ம் தேதியான நாளை மறுநாள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றைய தினத்தில் இந்த மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெயயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலே மிகவும் முக்கியமான மாவட்டமாக சென்னை உள்ளது. சுமார் 1 கோடி அளவிலான மக்கள் வசிக்கும் சென்னையில் கடந்த காலத்தில் பெய்த பெருமழை, கனமழை அதன் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால் மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:


வடகிழக்கு பருவமழை மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக ஏற்கனவே சென்னையில் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டிருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். பொதுமக்களுக்கு உதவுவதற்காக 1913 என்ற இலவச உதவி எண்ணையும் ஏற்பாடு செய்திருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி கூறியிருந்தார்.


சென்னையில் அதிகளவு மழைநீர் தேங்கும் வேளச்சேரி, தாம்பரம், புறநகர் பகுதிகளில் உடனடியாக மழைநீரை அப்புறப்படுத்துவதற்கும் மோட்டார்கள், பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னையில் பல இடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் சூழலில் ஏற்கனவே கடும் நெரிசலாக இருப்பதால் அந்த பகுதிகளில் மழைநீர் தேங்கினால் அதை உடனடியாக அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யவும் அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தயார் நிலையில் மோட்டார்கள், ஊழியர்கள்:


சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கினால் அதை அப்புறப்படுத்தவும் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியமான உணவு, குடிநீர் தடையில்லாமல் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் துணை முதலமைச்சர் உதயநிதி கூறியிருந்தார்.


வடகிழக்கு பருவமழை, ரெட் அலர்ட் எச்சரிக்கை குறித்து இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

நீர்நிலைகள் கண்காணிப்பு:


சென்னை மட்டுமின்றி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிற மாவட்டங்களிலும் போதியளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் முக்கிய நீர்நிலைகளான செம்பரம்பாக்கம், புழல் ஏரி, சோழவரம் ஆகியவற்றின் நீர் இருப்பையும் அதிகாரிகள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் நேற்று முதலே தங்களுக்கு தேவையான பழங்கள், காய்கறிகள், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைக்கத் தொடங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.