Tamil Nadu Coronavirus LIVE News : தமிழகத்தில் தொடர்ந்து இறங்குமுகத்தில் கொரோனா பாதிப்பு

தமிழகம் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 31 May 2021 08:17 PM
தமிழகத்தில் தொடர்ந்து இறங்குமுகத்தில் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 27 ஆயிரத்து 936 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 2 ஆயிரத்து 596 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் 31 ஆயிரத்து 223 நபர்கள் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 39 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 478 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஊரடங்கு நிவாரணத்தின் முதல் தவணை பெறாதவர்கள் ஜூன் மாதம் பெறலாம் - தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக, கடந்த 24-ந் தேதி முதல் முழு ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இதையடுத்து, முதல் தவணையாக ரூபாய் 2 ஆயிரம்  அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்பட்டது. இரண்டாம் தவணை விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில், முதல் தவணை பெறாதவர்கள் ஜூன் மாதம் தங்களது முதல் தவணையை பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  

தமிழகத்தில் ஜூன் 3 முதல் 6 வரை தடுப்பூசி செலுத்தப்படாது - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கடந்த மாதம் தமிழகத்திற்கு 2 மடங்கிற்கு மேல் தடுப்பூசி டோஸ் ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் 42.58 லட்சம் தடுப்பூசி டோஸ் ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து இந்த மாதத்திற்கான 1.74 லட்சம் டோஸ் தடுப்பூசி வரவேண்டியுள்ளது.  ஜூன் மாதத்திற்கான முதல் தவணை தடுப்பூசி வரும் 6-ந் தேதி தான் வரும் என்பதால், ஜூன் 3 முதல் 6ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்பட உள்ளது என்றும் கூறினார்.

உத்தரகாண்டில் ஜூன் 9-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போதுள்ள ஊரடங்கு வரும் ஜூன் 9-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில், வாரத்தில் ஜூன் 1 மற்றும் 7-ந் தேதிகளில் மட்டும் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மளிகை கடைககள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. நாளை ஒரு நாள் மட்டும் நோட்டு மற்றும் புத்தக கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளளது.  

தமிழகத்தில் 5 லட்சம் தடுப்பூசிகளே கையிருப்பில் உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தீவிரமாக விழப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் தற்போது கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே உள்ளதாக கூறினார்.  

எச்.எல். எல். தடுப்பூசி ஆலையில் தடுப்பூசி தயாரிப்பது குறித்து விரைவில் முடிவு - மத்திய அமைச்சர் தகவல்

வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல். ஆலையில் கோவிட் தடுப்பூசி தயாரிக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். அவரது கடிதத்திற்கு பதில் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இததொடர்பாக பரிசீலித்து விரைவில் தங்களுக்கு தெரிவிக்கப்படும் என்று ரவிக்குமார் எம்.பி.க்கு தெரிவித்துள்ளார்.

கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினை முதல்வர் திறந்து வைத்தார்.

கரூர் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்துடன் இணைந்து அமைத்துள்ள 200 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார். 

இறந்த 21 நாட்களுக்குள் பதிய தவறினால் அபராதம் விதிக்கும் முறையை திருத்த வேண்டும்.

இறந்த 21 நாட்களுக்குள் பதிய தவறினால் அபராதம் விதிக்கும் முறையை முதல்வர் தலையிட்டு திருத்த வேண்டும் என்று வெங்கடேசன்.எம்.பி வலியுறுத்தினார்.  


இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " பேரிடர் காலத்தில் இறப்புகள் அதிகரித்திருக்கிறது. அரசு அலுவலகங்களோ மிகக்குறைந்த ஊழியர்களோடு இயங்குகிறது. இறந்தவர்களைப் பதிய வாழ்கிறவர்கள் படாதபாடு படுகிறார்கள். அபராதத் தொகையை விட கொடியது மண்டல அலுவலகத்துக்கும் வார்டு அலுவலகத்துக்குமான அலைச்சல்.


மரணங்களை சந்தித்துள்ள வீடுகளில் உலராத கண்ணீரோடு மனிதர்கள் தேங்கி. கிடக்கிறார்கள். இறப்புச் சான்றிதழுக்காக அழுத கண்ணீரோடு அலையவிட வேண்டாம். எளிய மக்களின் இடரைக் குறைக்க இது மேலும் உதவும்' என்று தெரிவித்தார்.  

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருதுவமனைகள் மீது நடவடிக்கை - மா. சுப்பிரமணியன்

கொரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.     

கடந்த 50 நாட்களில் இல்லாத ஒருநாள் குறைந்தபட்ச பாதிப்பு ஏற்பட்டுள்ளது

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றின் தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1.52 லட்சம் பேர் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, கடந்த 50 நாட்களில் இல்லாத ஒருநாள் குறைந்தபட்ச பாதிப்பாகும்.        


எச்எல்எல்  பயோடெக் லிமிடெட் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதில் கடிதம்

செங்கல்பட்டில் உள்ள எச்எல்எல்  பயோடெக் லிமிடெட் என்ற தடுப்பூசி தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏப்ரல் 14ஆம் தேதி விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.


அதற்கு பதில் அளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் “எச்எல்எல்  பயோடெக் லிமிடெட் வளாகத்தில் கோவிட் தடுப்பூசி தயாரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்ற தங்களுடைய கடிதம் கிடைக்கப் பெற்றேன். இது தொடர்பாக பரிசீலித்து விரைவில் தங்களுக்கு தெரிவிக்கப்படும்”  என்று குறிப்பிட்டுள்ளார்

தமிழகத்தில் தடுப்பூசி போடப்படும் எண்ணிகையில் ஒரு புதிய மைல் கள்

தமிழகத்தில் மே 22 முதல் 28 வரையிலான ஒரு வார காலத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 


தமிழகத்தில் மே 24 முதல் 31ம்  தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  ஊரடங்கு நாட்களைப் பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி போடப்படும் எண்ணிக்கையை தமிழக அரசு அதிகப்படுத்தியுள்ளது. 


இதற்கு முன்னதாக, ஒரு வார காலத்தில் போடப்பட்ட அதிகபட்ச தடுப்பூசி எண்ணிக்கை 9,56,368 ( ஏப்ரல் 10- 16) ஆக இருந்தது.                

தடுப்பு மருந்து மாவட்டங்களுக்கு முறையாக பகிர்ந்தளிக்கப்படுகிறது

கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்து மாவட்டங்களுக்கு முறையாக பகிர்ந்தளிக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம்: தொழிலாளர் துறை அமைச்சகம்

கொரோனாவால் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு சமூக பாதுகாப்பு நிவாரணம் உறுதி செய்யப்படும் என தொழிலாளர் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 


இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "


தற்போது இஎஸ்ஐசி திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட தொழிலாளியின் மரணம் அல்லது முடக்க நிலைக்குப் பிறகு, அவரது சராசரி தினசரி ஊதியத்தில் 90 சதவீதம் அளவிற்கு ஓய்வூதியமாக அவரது வாழ்க்கைத் துணை, விதவைத் தாய் ஆகியோருக்கு வாழ்நாள் முழுவதும், குழந்தைகளுக்கு 25 வயது அடையும் வரையும், பெண் குழுந்தைக்கு திருமணம் ஆகும் வரையும் வழங்கப்படுகிறது.


தொழிலாளர் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கீழ்கண்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.


1. இறந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு கிடைக்கும் அதிகபட்ச பண பலன் ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


2. இறப்புக்கு முன்பு, உறுப்பினராக இருந்த ஒரு தொழிலாளி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனத்தில் தொடர்ந்து 12 மாதங்கள் பணியாற்றியிருந்தால், அவரது குடும்பத்தினருக்கு குறைந்தபட்ச உத்திரவாத பணப் பலன் ரூ.2.5 லட்சம் கிடைக்கும். இதற்கு முன்பு, இந்த விதிமுறை, ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து 12 மாதங்கள் பணியாற்றியிருக்க வேண்டும் என இருந்தது. அது தற்போது மாற்றப்பட்டுள்ளது.  இது ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை காரணமாக பலன்களை இழக்கும் ஒப்பந்தம்/ சாதாரண தொழிலாளர்களுக்கு பயன் அளிக்கும். 


3. குறைந்தபட்சம் ரூ.2.5 லட்சம் இழப்பீடு விதிமுறை 2020 பிப்ரவரி 15ம் தேதி முதல் மீண்டும் கொண்டுவரப்படுகிறது.


4. 2021-22 முதல் 2023-2024ம் ஆண்டு வரை வரும் 3 ஆண்டுகளில், இடிஎல்ஐ- நிதியிலிருந்து தகுதியான குடும்ப உறுப்பினர்கள் பெறும்  காப்பீட்டு தொகை ரூ.2185 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


5.  இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 50,000 குடும்பங்கள் இழப்பீடு கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் 10,000 பேர் கொரோனா காரணமாக இறக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்த தொழிலாளர் நல நடவடிக்கைள், கொரோனா காரணமாக உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். தொற்று ஏற்பட்டுள்ள சவாலான நேரத்தில், அவர்களை நிதி நெருக்கடியில் இருந்து காக்கும்" என்று தெரிவிக்கப்பட்டது.  


   

மளிகை பொருட்கள் கிடைக்க சென்னை மாநகராட்சி சிறப்பு நடவடிக்கை

பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள் அவர்களின் பகுதிகளிலேயே கிடைக்கும் வகையில் வணிகர் சங்கங்களுடன் இணைந்து நடமாடும் வாகனங்கள், ஆன்லைன் மற்றும் தொலைபேசி ஆர்டகளின்களின் மூலம் விற்பனை செய்ய சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


ஊரடங்கு நாட்களில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் மளிகை கடைகள் தொடர்பான விவரங்களுக்கு பிரத்தியோக போர்டலை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. 


மேலும், விவரங்களுக்கு COVID-19 PORTAL OF GREATER CHENNAI CORPORATION



     

Background

கடந்த 24 மணி நேரத்தில் 2,76,309  பேர் குணமடைந்துள்ளனர். தொடர்ந்து 17வது நாளாக, தினசரி குணமடைந்தோர் எண்ணிக்கை, தினசரி கொரோனா பாதிப்பை விட அதிகமாக உள்ளது. மேலும், குணமடைந்தோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்து 91.25 சதவீதமாக  உள்ளது.


தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 8.02 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து 6 நாட்களாக இந்த அளவு 10 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 28, 864 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டது.    

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.