HBD Edappadi Palanisamy : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று 69-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
பிறந்தநாளை கொண்டாடிய இபிஎஸ்
அதிமுகவில் கடந்த ஆண்டு ஒற்றைத் தலைமை பிரச்சனை ஓபிஎஸ், இபிஎஸ் இடையே ஏற்பட்டது. இதனால் அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து, ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் சட்டப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். தற்போது, அதிமுக முழுவதுமாக எடப்பாடி வசம் வந்தது என்றே கூறலாம்.
இந்நிலையில், பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது முதல் பிறந்தநாளை கொண்டாடினார். இதனால் தமிழ்நாடு முழுவதும் அதிமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் கேக் வெட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
சேலத்தில் கொண்டாட்டம்
அதேபோல் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு காலை முதலே கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், அவரது இல்லத்தின் முன்பு ஆயிரக்கணக்காண தொண்டர்கள் குவிந்து எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனிடையே சேலம் மாநகர அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு கேக் வெட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. 69வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு 200 கிலோ கேக் வெட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர். தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் எடப்பாடி பழனிசாமி 200 கிலோ கேக் வெட்டி கொண்டாடினார். தொடர்ந்து நிர்வாகிகளுக்கு கேக் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
சென்னையில் கொண்டாட்டம்
அதேபோன்று, சென்னை எம்.ஜி.ஆர். மாளிகையில் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேக்கினை, முன்னாள் அமைச்சர் பொன்னையன், வளர்மதி ஆகியோர் வெட்டி, அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கினார்கள்.
இந்நிகழ்வில், அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர் தாடி ம. இராசு, பொருளாளர் எம். அப்துல் அமீது, போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் எஸ். பழனி, கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் டி.சிவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அரசியலுக்குள் நுழைந்தது எப்படி?
வியாபாரம், விவசாயம் என்று இருந்த பழனிசாமியை அதிமுக அமைச்சராக இருந்த செங்கோட்டையன் தான் கட்சிக்கு அறிமுகம் செய்திருக்கிறார். 1974 ஆம் ஆண்டு அதிமுக கிளைச் செயலாளர் ஆனார் பழனிசாமி. அதுதான் அவரின் அரசியல் வாழ்வின் பிள்ளையார் சுழி. கோனேரிப்பட்டி என்ற கிராமத்தில் அதிமுக கிளைச் செயலாளர் ஆனார் பழனிசாமி. அதன் பின்னர் அப்படி கிட்டதட்ட இரண்டு தசமங்கள் கடந்தோடின. வெல்ல வியாபாரத்தில் நன்றாகவே சோபித்துவந்தார்.
1990 ஆம் ஆண்டு சேலம் வடக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அது அவரது அரசியல் வாழ்வில் ஒரு திருப்புமுனை என்றால் அது மிகையாகாது. அடுத்தடுத்து வந்த ஆண்டுகள் பழனிசாமிக்கு அரசியலில் ஏற்றம் தருவதாகவே அமைந்தன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், 1990ல் சேலம் வடக்கு மாவட்ட கழக இணைச் செயலாளர், 1991ல் சேலம் வடக்கு மாவட்டச் செயலாளர், 1993ல் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர், 2001ல் தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் தலைவர் என்று டாப் கியரில் சென்று கொண்டிருந்தார். அதிமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராவது தொண்டர்களுக்கு மிகப் பெரிய அந்தஸ்து. அப்படியாக 2006-ல் கழகக் கொள்கை பரப்புச் செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி.
சர்ச்சைக்கு மத்தியில் முதலமைச்சர்:
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் வரலாறு கொஞ்சம் நீண்டதுதான் என்றாலும் கூட சாமான்ய மக்கள் மத்தியில் அவர் பெருமளவில் அறிமுகமானது என்னவோ 2017ல் தான். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016 டிசம்பரில் மறைந்தார். அதன்பின்னர் ஏற்கனவே இருந்த சொத்துகுவிப்பு வழக்கில் வி.கே.சசிகலா சிறை சென்றார்.
அவர் சிறை செல்லும் முன்னர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார். 2017-ல் அ.தி.மு.க-வின் சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக முதல்வராகப் பதவியேற்றார் எடப்பாடி கே பழனிசாமி. அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்து வந்த இ.பி.எஸ். தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்வராக அன்று முதல் அடையாளமானார். அதிமுக ஐந்து ஆண்டுகள் ஆட்சியை நடத்தாது என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் அந்த ஆட்சிக்காலத்தை நிறைவு செய்து பின்னர் நடந்த 2021 தேர்தலில் தோல்வியடைந்தார்.