அமைச்சரவையில் மாற்றம்


திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. திமுக ஆட்சி அமைந்து ஏற்கனவே இரண்டு முறை அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3 வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் மீது புகார்கள் வந்த நிலையில் அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் புதிதாக டி.ஆர்.பி ராஜாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவிற்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.


அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடமிருந்த நிதித்துறை, தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


அதே சமயத்தில், பால் வளத்துறை மனோ தங்கராஜிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் சாமிநாதனுக்கு கூடுதலாக தமிழ் வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.


”நாசரை அமைச்சரவையில் இருந்து நீக்கியது நல்லது"


இந்நிலையில், சென்னை தியாகராஜா நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "தமிழ்நாடு அரசு ஓராண்டில் 3 முறை ஆவின் பால் விலையை உயர்த்தியுள்ளது. பால்விலை உயர்வுக்கு ஜி.எஸ்.டி தான் காரணம் என சொன்னார் நாசர்.


தொண்டரை கல் எறிந்த நாசரை அமைச்சரவையில் இருந்து விடுவித்தமைக்கு வரவேற்பு மற்றும் பாராட்டுக்களை தெரிவிக்கிறேன். ஆனால் தற்போது வந்திருக்கும் அமைச்சர் பால் கொடுக்கும் விவசாயிகளுக்கு பணம் உயர்த்தி வழங்க வேண்டும். மக்களுக்கு பால்விலையை குறைக்க வேண்டும். புதியதாக வந்திருக்கும் அமைச்சர் இதனை செய்வார் என்று நம்புகிறோம்” என அண்ணாமலை தெரிவித்துளளார்.


மேலும், ”தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை புதிய அமைச்சர் நிறைவேற்றுவார் என நம்புகிறோம். மூன்று தலைமுறைகளாக மாநிலத்தின் வளர்ச்சிக்கு அர்ப்பணித்து கொண்டிருந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் பிடிஆர் என்று முதல்வர் பேசியுள்ளார். இரண்டு மாதத்திற்கு முன் இப்படி பாராட்டிவிட்டு தற்போது மாற்றப்பட்டதற்கு காரணம் என்ன ?


பி.டி.ஆர். ஆடியோ வந்த ஒரே காரணத்தினால் அவரை நிதித்துறையில் இருந்து மாற்றுவது சரியல்ல. தவறு செய்தது அவர் இல்லை. திமுக தான். மெட்ரோ ரயில் விவகாரத்தில் என் மீது வழக்கு தொடர்ந்த முதல்வர், பிடிஆர் ஆடியோ தொடர்பாகவும் வழக்கு தொடுக்க அன்போடு கேட்கிறேன். அப்போது தான் முழு ஆடியோவும் நீதிமன்றத்தில் வழங்க முடியும்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது ஏன்?


தொடர்ந்து பேசிய அவர், ”தொழில்துறை அமைச்சராக டி.ஆர்.பி ராஜா வந்துள்ளார். எந்த குடும்பம் அதிக தொழில் நிறுவனங்கள் வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு தான் தொழில்துறை வழங்க வேண்டும் என்பது போல வழங்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பி ராஜா குடும்பத்தினர் அனைத்து துறையிலும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இதனால் தான் அவருக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டதா” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


மேலும், ”என் மீது நேற்று போடப்பட்ட வழக்குகள் நகைச்சுவையானது. இந்த வழக்கு ஒருபோதும் நீதிமன்றத்தில் நிற்காது. அரசு வழக்கறிஞர் மூலமும் என் மீது வழக்கு போடுங்கள். எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.