தி.மு.க.  அரசின் அமைச்சர்களின் சொத்து பட்டியலை தி.மு.க.பைல்ஸ் என்ற பெயரில் அண்ணாமலை கடந்த மாதம் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், இன்று நிருபர்களை சந்தித்த அண்ணாமலை தி.மு.க. பைல்ஸ் பாகம் 2 ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். 


சென்னையில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:


”அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ஆவடி நாசர் துறை குறித்து பல குற்றச்சாட்டை கூறினோம். ஆவின் பால் விலை ஒரே ஆண்டில் மூன்று முறை உயர்த்தப்பட்டது. பிப்ரவரியில் பச்சை நிற ஆவின்  பால் பாக்கெட்டின் கொழுப்பு தன்மை 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஐனவரி மாதம் தொண்டர் மீது கல் வீசினார். ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டதற்கு எங்களது பாராட்டை தெரிவித்து , வரவேற்கிறோம். புதிய அமைச்சர் தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்ற வேண்டும். 


பழனிவேல் தியாகராஜன் குறித்து  2022 ஐனவரியில் பேசிய முதலமைச்சர் 3 தலைமுறையாக தமிழக வளர்ச்சிக்கு அர்ப்பணித்த குடும்பம் அவர்கள் , தனது மொத்த திறமையையும் நிதித்துறைக்கு பயன்படுத்தி வருகிறார் என கூறினார். பிடிஆர் திராவிட மாடல் அரசின் பிராண்ட் அம்பாசடராக இருந்த அவரை மாற்ற காரணம் என்ன..? ஆடியோ பிரச்சனைக்காக அவரை மாற்றியது ஏற்க முடியாது.  முதலமைச்சர் என் மீது இன்னொரு அவதூறு வழக்கு தொடர வேண்டும் , அதன் மூலம் அந்த ஆடியோ நீதிமன்றம் செல்லும், 1 மணி நேர முழு ஆடியோவையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன். பி.டி.ஆரை பகடைக்காயாக முதலமைச்சர் பயன்படுத்த கூடாது. 


பி.டி.ஆர். ஆடியோ:


பிடிஆர் ஆடியோ பதிவை வெளியிட்டதும் முதல்வர் பார்வையில் குற்றம்தான். எனவே இரண்டாவது வழக்கை என் மீது முதலமைச்சர் தொடர வேண்டும். என் மீது மொத்தமாக 1461 கோடி இழப்பீடு கேட்டு திமுகவினர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்தியாவில் யார் மீதும் இந்த அளவு இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தது இல்லை. பார்ட் 2 திமுக பைல்ஸ்  ஜூலை மாதம் வெளியாகும் 21 நபர்கள் இடம் பெறுவர்.


சேகர்பாபு மகள் என்னிடம்தான் முதலில் வந்தார் , ஆனால் குடும்ப பிரச்சனை என்பதால் நீதிமன்றம் செல்ல சொன்னேன். இங்கு இல்லை என்றால் , கர்நாடக காவல்துறையை அணுக சொன்னேன். குடும்ப பிரச்சனையில் பாஜக தலையிட விரும்புவதில்லை. 


ஆரூத்ரா மோசடி:


ஆனால் அரசு எந்திரம் , தமிழக காவல்துறையை பயன்படுத்தி அந்த சகோதரிக்கு மனச்சுமையை ஏற்படுத்தி உள்ளனர். சாமானிய மனிதன் மீது தொடர்ந்து வழக்கு போடுவது தவறு. முதலமைச்சர் டிஜிபிக்கு இது குறித்து உத்தரவிட வேண்டும்.  அரசு தவறு செய்யவில்லை என்றால் வழக்கு ஏன் தொடரப்பட்டது என  முதலமைச்சர் வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்.  ஆரூத்ரா மோசடி பணம் எந்த அமைச்சருக்கு சென்றது என DMK பைல்ஸ் 2 -வது பாகத்தில் உண்மை வெளியாகும். DMK பைல்ஸ் மூன்றாவது பாகமும் வெளியாகும்” என்றார்.