அரூர் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில், கிருத்துவ மக்களுக்கு சலுகைகளை மீண்டும் வழங்க வலியுறுத்தி, கேஸ் சிலிண்டரை வைத்துக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த 6 பெண்கள் உட்பட 17 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.


தருமபுரி மாவட்டம் அரூர் ரவுண்டானாவில் துாய இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது.  இந்த ஆலயத்திற்கு அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், 350க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பத்தினர் வழிபாடு செய்ய வருகின்றனர். இதற்கு பள்ளி, திருமண மண்டபம் உள்ளிட்ட சொத்துக்கள் உள்ளது. இந்த தேவாலயத்திற்கு வரும் குடும்பத்தினருக்கு சுப, துக்க நிகழ்விற்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வந்தது. மேலும் இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக புதிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் தூய இருதய ஆண்டவர் ஆலயம் செயல்பட்டு வருகிறது. இந்த புதிய நிர்வாகம் சலுகைகள் எதுவும் வழங்குவதில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


இதனால் கடந்த சில மாதங்களாக தேவாலய நிர்வாகிகளிடம், இங்குள்ள மக்களுக்கு இடம் வாங்கி வீடு கட்டித்தர வேண்டும். கடந்த காலங்களை போல், மாணவர்களுக்கு படிப்பு கட்டணம் வசூலிக்கக் கூடாது. துக்க நிகழ்ச்சிகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கிறிஸ்தவர்கள்  உள்ளிருப்பு, தர்ணா உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.




ஆனால் தொடர்ந்து கிருத்தவ மக்களின் கோரிக்கைக்கு, நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று இரவு துாய இருதய ஆண்டவர் ஆலய வளாகத்தில் உள்ள அருளகத்தில் புகுந்து அங்கிருந்த பங்கு தந்தை பெல்லார்மின், 60, அவரது சகோதரர் ஆரோக்கியசாமி, ரெக்ஸ், சமையலர் அந்தோனியம்மாள் ஆகியோரை தகாத வார்த்தையால் திட்டி வெளியேற்றியுள்ளனர். தொடர்ந்து, சமையலறையில் இருந்த காஸ் சிலிண்டரை வெளியே எடுத்து வந்து வாசலில் இருந்த ஷட்டரை பூட்டிக் கொண்டு உள்ளே வந்தால் காஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து விடுவோம் என மிரட்டல்  விடுத்துள்ளனர். இதனையறிந்த காவல் துறையினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டம் நடத்தி கொண்டு இருந்தனர். தொடர்ந்து தருமபுரி மாவட்ட எஸ்.பி., கலைச்செல்வன் நள்ளிரவில் நேரில் வந்து  பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் வெளியில் வரவில்லை. 


இதையடுத்து, அதிரடியாக பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே நுழைந்த காவல் துறையினர் மணி, மைக்கேல் ராஜ், ராஜா, முத்து, செளரி, ஈஸ்டர்ராஜா, செல்வம்,  இளையரசன், போஸ் உள்ளிட்ட 11 ஆண்கள் மற்றும் அந்தோனியம்மாள்,  மரியம்மாள், செல்வி, சாந்தி, ராணி, ஸ்டெல்லாமேரி என மொத்தம், 17 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து தூய இருதய ஆண்டவர் ஆலய வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண