அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் மற்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒருவார காலமாக அதிமுக கட்சியின் நிலவரங்கள் கலவர பூமியாக மாறியுள்ளது. கடந்த 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என்று பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நடந்த பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலரும் ஒற்றைத் தலைமை வலியுறுத்தி 23 தீர்மானங்களை நிராகரிப்பதாக ஆவேசமாக தெரிவித்தனர்.இக்கூட்டத்தில் இருந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பாதியில் வெளியேறினார்.இதனிடையே சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இன்று (ஜூன் 27) காலை 10 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என நேற்று மாலை அறிக்கை ஒன்று வெளியானது.
இது ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் - இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என ஒருவர் பெயருமே இல்லாமல் கழக தலைமை நிலையச் செயலாளர் என்ற பெயரில் வெளியாகி அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விளக்கமளித்த ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் எந்த வித ஒப்புதலையும் கூட்டத்திற்கு அளிக்கவில்லை என தெரிவித்தார்.
முன்னதாக இன்று காலை எடப்பாடி பழனிசாமியுடன் அவரது இல்லத்தில் வைத்து முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை கழகத்தில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில் அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் மற்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஒற்றைத் தலைமை பிரச்சனையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அக்கட்சியின் தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தொண்டர்களும் கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளனர். நிலைமை இப்படி இருக்கையில் அதிமுக கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரவியுள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்