”நான் செய்றது சிறிய உதவி என்றாலும் பசியோட கிடக்கிற ஆதரவற்றவங்களுக்கு மிகப்பெரும் ஆறுதலா இருக்கும். அதை அவங்க கண்ணுல உணர முடியுது.” என்று மகிழ்கிறார் முத்துக்குமார்
கொரோனா இரண்டாவது பேரலையை தடுக்கும் வகையில் நாட்டில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளிலேயே தங்கியிருந்து சமூகப் பரவலைக் கட்டுப்படுத்த ஒத்துழைக்குமாறு மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன. அரசு நிகழ்வுகள் உட்பட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவால் பலரும் பணிக்குச் செல்லாமல் வறுமையில் வாடுகின்றனர்.
அரசு சார்பாக ஒரு பக்கம் உதவி ஏற்பாடு செய்தாலும் சமூக ஆர்வலர்கள் மற்றொரு பக்கம் கைகோர்த்து உதவி செய்துவருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் தனது நான்கு சக்கர ( மாற்றுத்திறனாளி) மோட்டார் பைக்கில் மனைவியுடன் சேர்ந்து உதவி செய்துவருகிறார். ஜெராக்ஸ் கடை நடத்தி குறைந்த வருமானம் ஈட்டினாலும் தன்னால் முடிந்த உதவியாவது சமூகத்திற்கு செய்ய வேண்டும் என உதவி செய்துவருகிறார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அடுத்த சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார்.
பிரான்மலை பகுதியில் குட்டி ஜெராக்ஸ் கடை வைத்துக் கொண்டு தன் குடும்பத்தை கவனித்து வருகிறார். அம்மா, மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் என இவரது வருமானத்தை நம்பி தான் குடும்பம் செயல்படுகிறது. ஊரடங்கு நேரத்தில் உணவு இல்லாத இடங்களுக்கு உணவுகளை தேடி, தேடி கொடுத்துவருகிறார். தங்களது வீட்டில் சமைத்த உணவுகளை பார்சல் செய்து கொடுத்து, பசியாற்றி மகிழ்கிறார். இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இது குறித்து முத்துக்குமார் நம்மிடம்...," எனக்கு சின்ன வயசுல படிப்பு மண்டைல ஏறல. மூனாப்போட படிப்ப நிப்பாட்டிட்டேன். நல்லா வெவரம் தெரிஞ்சதுக்கு அப்றம் தான் படிப்போட அருமை தெரிஞ்சுச்சு. எங்கையும் வேலை கெடைக்கல. அதனால சொந்தமா ஜிராஸ் (ஜெராக்ஸ்) கடை வச்சுட்டேன். எனக்கு ஒடம்புல 85% குறை இருக்குனு மாற்றுத்திறனாளி சட்டிவிகேட்டு குடுத்துருக்காங்க. அதனால அரசோட சில சலுகை கிடைக்குது. ஜிராக்ஸ் கடைய வச்சுதான் வீட்டோட வருமானம்.
இருந்தாலும் எனக்கு இலகுன மனசு. யாருக்கும் ஈசிய உதவி செஞ்சுருவேன். போனவருசம் லாக்டவுன் போட்டப்ப தொழில் முடங்கிருச்சு. அந்த சமயத்தில் பிரான்மலை…,ல ஒரு டீ கடைல, டீ குடிச்சுக்கிட்டு இருந்தே. அப்ப ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட அம்மா பசில வாடி திருஞ்சத பார்த்தேன். அது என்ன ரெம்பவும் நோகடிச்சுருச்சு. அவங்களுக்கு ஒரு டீ..,யும் பண்ணும் வாங்கி கொடுத்தேன். வீட்டுக்கு போனதுக்கு அப்ரம் என் மனைவீட்ட சொன்னே. நாமலே சாப்பாடு செஞ்சு, கொஞ்ச பேத்துக்கு குடுக்கலாம்னு ஐடியா வந்துச்சு அதனால வீட்லையே தக்காளி சோறு, புளி சோறு, தயிர் சோறுனு.., செஞ்சு கொடுத்தோம்.
இதபார்த்துட்டு என் நண்பர்களும் உதவி செஞ்சாங்க. என் மனைவி என்னோடையே வந்து சாப்பாடும் குடுத்தா. அது அவளுக்கு சந்தோசமா பட்டுச்சு. அதே மாதிரி இந்த வருசமும் சாப்பாடு கொடுக்குறோம். என் நண்பர்களும் என்னுடைய சேவைல பங்கெடுக்கிறாங்க. நான் செய்றது சிறிய உதவி என்றாலும் பசியோட கிடக்கிற ஆதரவற்றவங்களுக்கு மிகப்பெரும் ஆறுதலா இருக்கு. அதை அவங்க கண்ணுல உணர முடியுது. தொடர்ந்து என்னால் முடிந்த உதவிய கண்டிப்பா செய்வேன்" என்றார் ஆனந்தக் குரலில்.