தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களுக்கு மேலாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்துதான் அதிகம் பேசப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இதுவரை இந்த கள்ளச்சாராயத்தால் 42 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உயிரிழப்பு அதிகரிக்கும் என்ற அச்சமும் நிலவி வருகிறது. 


தமிழக அரசின் பேரவலம்:


இந்தநிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனி தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்படாதவகையில் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என தெரிவித்திருந்தார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், நடிகர் விஷால் என பலரும் கண்டனங்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். 






அந்த வகையில் தற்போது நடிகரும், இசைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்கள் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், “காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது . கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது , இனி மரணங்கள் நிகழாவண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை.” என குறிப்பிட்டுள்ளார்.