தென்காசி மாவட்டம் கொட்டாகுளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து தற்போது தென்காசியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் வினித் சென்னையில் மென்பொருள் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். அதேபகுதியை சேர்ந்த குஜாரத் மாநிலத்தை சேர்ந்த நவீன் பட்டேல் தென்காசி பகுதியில் 20 ஆண்டுகாலமாக மரக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் கிருத்திகா பட்டேல், வினித் என்பவரும் பள்ளி பருவம் முதல் காதலித்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதியன்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஒரு மாதம் காலமாக இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் பொங்கல் அன்று கோயிலுக்கு சென்று வீடு திரும்பும் போது இவர்களது காரை வழிமறித்து பெண் வீட்டார்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, கிருத்திகா பட்டேலை கடத்தியதாக காதலன் மாரியப்பன் வினித் தென்காசி, குற்றாலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பெயரில் அந்த பெண்ணின் உறவினர் மற்றும் பெற்றோர்கள் என 12 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முகேஷ் பட்டேல், சுப்பிரமணியன், தினேஷ் பட்டேல், பிரேம்சந்திரமேஷிஹா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஜெகதீஷ் லலித்குமார், ராஜேஷ் பட்டேல், நவீன் பட்டேல், தர்மிஸ்தா பட்டேல், விஷால், கீர்த்திபட்டேல், சண்முகராஜ், மைத்திரிக் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.
இந்தநிலையில், கடத்தல் தொடர்பாக கிருத்திகாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன் ஜானீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருத்தனர். மேலும், வினித் தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கானது இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகளின் உத்தரவின் பேரில் கிருத்திகா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதிகள், “ கிருத்திகா மேஜர் என்பதால் யாருடன் செல்ல வேண்டும் என்பது அவருடைய விருப்பம். கிருத்திகா யாருடன் செல்ல வேண்டும் என்பதை எழுத்துப்பூர்வமாக தர வேண்டும். கிருத்திகா யாருடன் செல்கிறாரோ அவரே, பெண்ணின் பாதுகாப்புக்கு முழு பொறுப்பு. அவரை அவர்களே முறையாக விசாரணைக்கு ஆஜர்படுத்த வேண்டும்.” என்று தெரிவித்தனர்.
இதையடுத்து கிருத்திகா தனது உறவினரான ஹரிஷூடன் செல்வதாக எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுத்ததையடுத்து அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், வினித் மாரியப்பன் நீதிமன்றத்தை அணுகி உரிய நிவாரணத்தை பெற்று கொள்ளலாம் என தெரிவித்து நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.