தமிழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் பணிக்கு, தகுதி தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. இதில் முதல் தாள் இடைநிலை ஆசிரியர் தேர்வும், இரண்டாம் தாள் பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெற்று தேர்வில் 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2013ஆம் ஆண்டு நடந்த தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணி வழங்க சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்தது. ஆனால் வெற்றி பெற்றவர்களின் 10, 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை கொண்டு வெயிட்டேஜ் முறையை கொண்டு பணி வழங்கப்படும் என்று தீடீரென அரசு அறிவித்தது. இதனால் 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றவர்களில் சுமார் 6000 பேர், ‘வெயிட்டேஜ்’ என்ற முறை அமல்படுத்தப்பட்டதால் தங்கள் பணி வாய்ப்பை இழந்தனர்.

 


 

இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு, தமிழக அரசு ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் முறை இல்லை என கூறி வெயிட்டேஜ் முறையை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது. இதனையடுத்து வெயிப்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என பட்டதாரிகள் அப்போதய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரை சந்தித்து வலியுறுத்தினர். ஆனால் பணி வழங்குவதாக கூறி, காலம் தாழ்த்தி வந்தனர். இந்நிலையில், சட்டமன்ற பொதுத்தேர்தல் வந்தது. அப்பொழுது திமுக தேர்தல் அறிக்கையில், வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


 

இந்நிலையில் தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த தீர்த்தமலை பகுதியை சேர்ந்த வி.ஞானவேல் மற்றும் அதே மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் ஆகியோர் முறையே இரண்டாம் தாளில் 100 மதிப்பெண் மற்றும் 98 மதிப்பெண் பெற்ற நிலையில் அரசு வேலை கிடைக்காததால் செங்கல் சூளையிலும் பெயிண்ட் அடிக்கும் இடத்திலும் தினக்கூலியாக வேலை செய்து வருகின்றனர்.

 

தங்களின் பட்டப்படிப்பு தகுதியை வைத்து தனியார் பள்ளிகளுக்கு வேலைக்கு செல்ல விரும்பினாலும், டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் திடீரென அரசு பணிக்கான வாய்ப்பு கிடைத்து சென்று விட்டால் ஆண்டுதோறும் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்து பயிற்சி அளிக்க வேண்டும் என்பதால் தனியார் பள்ளி நிர்வாகங்கள் தங்களுக்கு வேலை வாய்ப்பை மறுப்பதாக கூறுகின்றனர்.

 


 

இந்த வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்த முடியால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும், மேலும்  ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தபோதும், கடந்த ஆட்சியில் வெயிட்டேஜ் என்ற முறை பின்பற்றப்பட்டதால் வேலை வாய்ப்பு, வருவாய் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் நிலையில், வெயிட்டேஜ் முறையால் 90 மதிப்பெண் பெற்றும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.