அறநிலையத்திற்கு சொந்தமான 47 கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்படும் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். 


இன்று (05.08.2021) சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் திருக்கோயிலில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தை  தொடங்கி வைத்தார்.  பின்னர், செய்தியாளர்ளிடம் பேசிய அவர், " தமிழில் அர்ச்சனை என்ற அறிவிப்பு ஒன்றும் புதிதல்ல. 1971ம் ஆண்டு, மறைந்த கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அப்போது இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருந்த கண்ணப்பன், கோவில்களில் தமிழில் செய்யப்படும்  என்றுசட்டமன்றத்தில் அறிவிப்பாக வெளியிட்டார்.  1974ம் ஆண்டு, இது தொடர்பான சுற்றறிக்கை இந்து அறநிலையத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 


விரும்புகிறவர்கள் மட்டுமே தமிழில் அர்ச்சனை மேற்கொள்ளலாம்.இதர மொழிகளில் மேற்கொள்ளப்படும் வழிபாடுகளை இத்திட்டம் தடுக்காது என்பதனை, 1998ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற விவாதத்தின் போது கலைஞர் கருணாநிதி தெளிவுபடுத்தியுள்ளார். பக்தர்கள் தங்கள் வழிபாடுகளுக்கு உகந்த மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதில், இருவேறுபட்ட கருத்துகளுக்கு இடமில்லை என்பதால் இன்று இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்" என்று தெரிவித்தார்.


மேலும், "விரைவில் அனைத்து கோயில்களுக்கும் 14 போற்றி புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும். இதனை, முதல்வர் அவர்களே வெளியிடுவார். அம்மன்,ஈசன்,அம்பாள்,விநாயகர், வைணவம், சைவம் போன்ற வழிபாடுகளுக்கு உதவும் வகையில் போற்றி புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. திருக்கோயில்கள் தாங்கள் விரும்பும் போற்றி புத்தகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்" என்றும் தெரிவித்தார். 


அர்ச்சர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், " ஏற்கனவே, மறைந்த முதல்வர் மு. கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் 1970ம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்டது. இதற்கான பயிற்சி நிலையங்களும், வேத ஆகம்  பாட சாலை நிலையங்களும் தமிழ்நாட்டில் உள்ளன. இந்த உள்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி, தமிழில் அர்ச்சனை செய்வதற்கான பயிற்சியை அளிக்கப்படலாம் என்றும் தெரிவித்தார். 


முன்னதாக, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 
சென்னை பிராட்வே-யில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், " திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என எப்போதும் விமர்சனம் செய்யும் பாஜக தலைவர்களே திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளை பாராட்டி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலால் "வசை பாடியவர்கள் கூட வாழ்த்தும்  நிலை" ஏற்பட்டுள்ளது. தமிழில் அர்ச்சனை செய்யும் முறை முதலில் பெரிய கோவில்களிலும், அதனைத் தொடர்ந்து சிறிய கோவில்களிலும் கொண்டுவரப்பட உள்ளது. அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யக் கூடிய அர்ச்சகர்கள் இருக்கிறார்கள். அவர்களை முறையாக பயன்படுத்தி இனி அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 


இனி தமிழகத்தில் கோவில் திறந்திருக்கும் அனைத்து நேரங்களிலும் தமிழில் அர்ச்சனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மூன்றாவது அலையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரிய கோவில்களில் ஆடி மாத திருவிழாக்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது"என்றும் தெரிவித்தார்.