வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் ஊராட்சியை சேர்ந்தவர் திருமால் (35) . அங்குள்ள இந்து மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த இவர், ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ கணினி அறிவியல், வாணியம்பாடியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பி.டெக் தகவல் தொழில்நுட்பத் துறை பொறியியல் முடித்த பட்டதாரி. 




2011 முதல் 2016 வரை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிய திருமால்,  ஆண்டு தோறும் பல லட்சங்களை அதற்கு ஊதியமாக பெற்று வந்துள்ளார். விவசாய குடும்ப பின்னணியில் இருந்து வந்த திருமாலுக்கு இயற்கை விவசாயத்தின் மீது ஒரு அளவில்லா காதல் கொண்டு இருந்தார் .  அந்த காதல், அவரது வேலை துறந்து விவசாயத்தில் குதிக்கும் அளவிற்கு இருக்கும் என திருமால் கூட அப்போது நினைத்திருக்க மாட்டார். 




இயந்திர வாழ்க்கை நிரந்தரமல்ல என்பதை படிப்படியாக புரியத்துவங்கினார் திருமால். மென்பொருள் வேண்டாம், மண்பொருள் போதும் என முடிவு செய்து 2016 தனது சொந்த ஊருக்கு திரும்பினார்.  தனது தந்தை ராஜமாணிக்கம் உடன் இணைந்து தங்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் , இயற்கை விவசாயம் செய்யத் துவங்கினார். பின்பு சுமார் 5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மொத்தம் 6 ஏக்கர் நிலத்தில் முள்ளங்கி , தக்காளி , பச்சை மிளகாய், நூக்கல், வெண்டைக்காய் , பீர்க்கங்காய் , கத்தரிக்காய், கேரட் , பப்பாளி , கொய்யாப்பழம் என பல வகையான காய்கறிகளை வெற்றிகரமாக இயற்கை முறையில் விளைவித்தார். 




‛நல்ல வேலை, கைநிறைய சம்பளம், இதையெல்லாம் விட்டு விட்டு... இப்படி வந்து சிரமப்படலாமா...’ என அவருக்கு அறிவுரை கூறியவர்களும் அதிகம், ‛முட்டாள் தனம்’ என கிண்டல் செய்தவர்களும் ஏராளம். ஆனால் அதையெல்லாம் மனதிலும், மூளையிலும் ஏற்றிக்கொள்ளவில்லை திருமால். அவரது குறி அனைத்தும் அறுவடையில் தான் இருந்தது. நினைத்தது போலவே நல்ல மகசூல் கிடைத்தது. ஆனாலும் அடுத்து தான் அவருக்கான பெரிய சவால் காத்திருந்தது. 






தனது விளைச்சலில் வரும் லாபத்தின் பெரும் பங்கு இடைத்தரகர்களுக்கு செல்வதை  எண்ணி கவலைப்பட்டார் திருமால். தன்னுடன்படித்த மென்பொருள் பொறியாளர் நண்பர்கள் உதவி உடன் "விவசாயி மண்டி" (VIVASAYI MUNDY)  என்னும் புதிய ஆன்ட்ராய்டு செயலியை கடந்த ஏப்ரல் 14ம் தேதி துவங்கினார்.  இயற்கை விவசாயத்திற்கு மக்கள் மத்தியில் இருக்கும் கிராக்கியை, முறையாக சந்தைப்படுத்தினால் நல்ல லாபம் கிடைக்கும் என நம்பினார். அதற்கு ‛விவசாயி மண்டி’ அவருக்கு பெரிய அளவில் கை கொடுத்தது. தனது இயற்கை வழி விளை பொருட்களை சரியான விலையில் விற்கத் துவங்கினார். மக்களுக்கும் நியாயமான விலையில் காய்கறிகள் கிடைத்தன.  இன்று வேலூர்  மாவட்டம் முழுவதும் காய்கறிகளை இலவச டோர் டெலிவரி செய்து புதிய சாதனை படைத்து வருகிறார் திருமால்.   






எப்படி சாத்தியமானது இந்த சாதனை? ABP நாடு டிஜிட்டல் தளத்திற்கு மனம் திறந்தார் திருமால். ‛‛நான் விவசாயம் செய்யும் 6  ஏக்கர் நிலத்தில்,  வேப்பம் புண்ணாக்கு, இஞ்சி, பூண்டு,  பச்சை மிளகாய் ஆகியவை ஒன்றாக அரைத்து மாட்டு கோமியத்தில் 3 நாள் ஊற வைத்து எடுத்து, அந்த ஒரு லிட்டரில் 10 லிட்டர் தண்ணீர் கலந்து  பயிர்களுக்கு உரமாகவும் , பூச்சி மருந்தாகவும் பயன்படுத்தினேன். அது பெரிய அளவில் பலனளித்தது.  






மூன்று மாத பயிரான  இந்த காய்கறிகளை விளைவிக்க மொத்தம் எனக்கு 2 லட்சம் வரை செலவாகிறது . எனினும் 3 மாதங்கள் கழித்து சுமார் 2 லட்சம் முதல் 6  லட்சம் ரூபாய் வரை லாபம் மட்டுமே எனக்கு கிடைக்கிறது . இதை பொதுமக்களுக்கும் பயனுள்ள முறையில் மாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இந்த ஆன்ட்ராய்டு  செயலியை வடிவமைத்து எனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் காய், கனிகளை டோர் டெலிவரி செய்து வருகிறேன். அதன்படி தக்காளி கிலோ ஒரு ரூபாய்க்கும் , முள்ளங்கி வெண்டைக்காய் போன்ற காய்வகைகள் கிலோ 15  ரூபாய் வரையிலும் ,கேரட் உள்ளிட்ட காய் வகைகள் கிலோ 20  ரூபாய் வரையிலும் விற்பனை செய்து வருகிறேன். எனது நம்பிக்கையின் படி , தக்காளி விலை மார்க்கெட் நிலவர படி ரூபாய் 30  உயர்ந்தாலும் , என்னால் கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும்,’’ என்று  நம்பிக்கை தெரிவித்தார் திருமால்.


விவசாயம் நம்மை மட்டுமல்ல, நம்மை சார்ந்தவர்களுக்கும் உணவளிக்கும். அதை பின்பற்ற தான் இங்கு ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. திருமால்கள் இருப்பதால் தான் விவசாயம் காக்கப்படும் என்கிற நம்பிக்கை அவ்வப்போது துளிர்விடுகிறது.