ஏப்ரல் முதல்வாரத்தில் இந்தியா Sputnik-V எனப்படும் கொரோனா தடுப்பூசியை அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளது. கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசிகளுக்கு அடுத்து இந்தியா அங்கீகரித்திருக்கும் மூன்றாவது கொரோனா தடுப்பூசி இது. ரஷ்ய தனியார் நிறுவனமான காமாலேயாவின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தத் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 92 சதவிகிதம் செயல்படுவதாக சொல்லப்படுகிறது. மற்ற தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில் இதன் செயல்பாடு முற்றிலும் வேறானதாக இருக்கும் என தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மக்களிடையே நோய் பரவுதல் அச்சம் ஒருபக்கம் இருந்தாலும் தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்த அச்சம் தொடர்ச்சியாகவே இருந்து வருகிறது.




வயது, பாலினம் மற்றும் இதர நோய்க்குறைபாடு உடையவர்கள் என வகை வாரியாக யாரிடமெல்லாம் தடுப்பூசிகளுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன? அவ்வாறு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடம் தென்பட்ட தாக்கங்கள் என மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறை மிகவும் வெளிப்படையான அறிக்கையை வெளியிடவேண்டியது அவசியமாகிறது. தடுப்பூசி போடும் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் இந்தக் காலத்தில் இது கூடுதல் அவசியமாகிறது.





சூழலுக்கு ஏற்ப, தடுப்பூசி போட்டதற்குப் பிறகான குறிப்பிடத்தக்க மரணங்களும் நிகழ்ந்து வருகின்றன. அண்மையில் நடிகர் விவேக் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அடுத்த இரண்டு நாட்களில் மாரடைப்பால் இறந்தது மக்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியது எனலாம். மன அழுத்தம்தானே என அதனை சர்வசாதாரணமாகக் கடந்துவிட முடியாது. இன்ன தடுப்பூசிகளுக்கு இன்ன பக்கவிளைவுகள், மேலும் வயது, பாலினம் மற்றும் இதர நோய்க்குறைபாடு உடையவர்கள் வாரியாக யாரிடமெல்லாம் தடுப்பூசிகளுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன? என்ற தகவல்களை வெளியிடுவது அவசியமாகிறது.


என்னென்ன தடுப்பூசிகளுக்கு என்னென்ன பக்கவிளைவுகள்?




கோவிஷீல்ட் பக்கவிளைவுகள்:


ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியிடப்பட்ட கோவிஷீல்ட் ஆய்வு விவரங்கள் அதன் தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்ட்டியூட்டின் வலைப்பக்கத்தில் கிடைக்கப்பெறுகிறது. அதில் இடம்பெற்றிருக்கும் விவரங்களின்படி தடுப்பூசி போட்டுக் கொண்ட 10-இல் 1 நபருக்கு



  • ஊசி போட்ட இடத்தில் வலி, வீக்கம், அரிப்பு, காயம் அல்லது சருமம் சிவந்துபோதல் ஏற்படலாம்

  • உடல் அயற்சி

  • குளிர் நடுக்கம், காய்ச்சல்

  • தலைவலி

  • குமட்டல்

  • கைகால் மூட்டுப் பகுதிகளில் வலி


ஆகியன ஏற்படலாம். மிக அரிதாகச் சிலருக்கு



  • மயக்கம்

  • பசி இல்லாமை

  • வயிற்றுவலி

  • அதிக வியர்வை

  • சருமத்தில் அலர்ஜி


ஆகியன ஏற்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு டோஸ்களாகச் செலுத்தப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளில் முதல் தடுப்பூசி மற்றும் இரண்டாம் தடுப்பூசிக்கான பக்கவிளைவுகள் எனத் தனித்தனியே எவ்வித விவரங்களும் அந்த பக்கத்தில் கிடைக்கப்பெறவில்லை. மேலும் கோவிஷீல்ட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட முறை, ஆய்வு விவரங்கள் அதற்கான படிப்பினைகள் குறித்த வெளிப்படைத்தன்மையான விவரங்கள் எதுவுமே கோவிஷீல்ட் தடுப்பூசிகள் குறித்து இடம்பெறவில்லை. இந்தியாவில் இதுவரைச் செலுத்தப்பட்ட 10 கோடி கொரோனா தடுப்பூசிகளில் 80 சதவிகிதம் கோவிஷீல்ட் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.  


கோவாக்ஸின் பக்கவிளைவுகள்:




பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்ஸின் ஏற்படுத்தும் பக்கவிளைவுகளாக



  • ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் வலி, வீக்கம்

  •  தலைவலி

  • காய்ச்சல்

  • உடல்வலி

  • குமட்டல்

  • வாந்தி

  • அரிப்பு 


அந்த நிறுவனம் தனது பக்கத்தில் பட்டியலிட்டுள்ளது. கோவிஷீல்ட் போலவே கோவாக்சின் தொடர்பாகவும் விரிவான ஆய்வு விவரங்கள் எதுவும் அந்த நிறுவனத்தின் பக்கத்தில் கிடைக்கப்பெறவில்லை.  ஆனால் கொரோனா பிரிட்டிஷ் வேரியண்ட் வகையான B.1.1.7க்கு எதிராக கோவாக்சின் வீரியமாகச் செயல்படுவதாக அந்த நிறுவனம் தனது விளம்பரங்களில் குறிப்பிட்டு வருகிறது. இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் கோவாக்ஸின் உற்பத்தி பத்து மடங்காக அதிகரிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அண்மையில் கூறியது இங்கே குறிப்பிடவேண்டியது.


விவாதிக்கப்படாத ஸ்புட்னிக்-வி பக்கவிளைவுகள்:




சர்வதேச அளவில் சுமார் 3 மில்லியன் பேருக்குச் செலுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் Sputnik V தடுப்பூசி குறித்து ரஷ்ய நிறுவனம் மிக விரிவான ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. பரிசோதனை காலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 4 பேர் கொரோனா அல்லாத பிற காரணங்களால் இறந்ததையும் அவர்களது ஆய்வில் பதிவு செய்துள்ளார்கள்.


எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத கோல்ட் வைரஸ் முறையில் இந்தத் தடுப்பூசி செயல்படும் என அந்த நிறுவனம் குறிப்பிடுகிறது. ஆனால் இந்தத் தடுப்பூசி ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் குறித்து அந்த நிறுவனம் தனது ஆய்வில் எங்குமே விவாதிக்கவில்லை. பக்கவிளைவுகள் குறித்து எங்குமே விவாதிக்காத ஒரு தடுப்பூசியை நாட்டில் அனுமதிப்பது ஆரோக்கியமானதா? என்கிற கேள்வியை இது எழுப்புகிறது.

ஒவ்வொரு தடுப்பூசி நிறுவனங்களுமே தங்கள் அதிகாரபூர்வ வலைத்தளங்களில் தடுப்பூசி தொடர்பான விவரங்களைக் குறிப்பிட்டிருந்தாலும்,  தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கு பிறகான இறப்புகளுக்கு பதில் தரும் அளவுக்குப் போதுமானதாக இந்தத் தகவல்கள் இல்லை. அரசு முன்வந்து தடுப்பூசி தொடர்பான மிக விரிவான வெளிப்படைத்தன்மையுடன் கூடிய ஆய்வுகளை மேற்கொண்டு இந்தத் தடுப்பூசிகள் 100 சதவிகிதம் பாதுகாப்பானவை என உறுதிசெய்யும் நிலையில் மட்டுமே மக்களிடம் நம்பகத்தன்மை ஏற்படும், தடுப்பூசிகள் குறித்தான மன அழுத்தத்துக்கும் தீர்வு கிடைக்கும் என்பதே மக்கள் நலன் விரும்புபவர்களின் கருத்தாக உள்ளது.