குழந்தைகளுக்கு நாம் சேர்த்து வைக்கும் சொத்து அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் உரிய காலத்தில் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்வதுதான் என  மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் கருத்தடை குறித்த விழிப்புணர்வு முகாமில் தகவல் தெரிவித்துள்ளார்.


 




 


கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணா சமுதாய மன்றத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக அதிக பிறப்புள்ள தாய்மார்கள் மற்றும் அவரது குடும்ப நபர்களுக்கு கருத்தடை குறித்த விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.


இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,


 


 




 


 


தாய்மார்கள் மற்றும் இங்கு வந்திருக்கக்கூடிய அற்புதமான இனிமையான குழந்தைகள் அனைவரையும் வருக என்று வரவேற்கிறேன். தாய்மார்கள் உடன் வருகை புரிந்திருக்கும் கணவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் இந்த நிகழ்ச்சி எதற்காக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கான திறவுகோலுக்கான கூட்டம். உங்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சி அளிக்கும் கூட்டம். இந்த துறைக்கு குடும்ப நலன் துறை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்னதாக குடும்ப கட்டுப்பாட்டு என்று சொல்வார்கள். 


என் குடும்பத்தில் நான் ஒரே குழந்தை தான். என்னை நல்லபடியாக படிக்க வைத்தார்கள் சந்தோசமாக வைத்தார்கள். அதேபோல் நீங்கள் அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளக்கூடாது அப்போதுதான் உங்கள் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நாம் செய்து கொடுக்க முடியும். நல்ல கல்வி அளிக்க முடியும், நல்ல உணவு அளிக்க முடியும் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க முடியும். உங்கள் குழந்தை உங்களுக்கு பிடித்திருக்கிறது உண்மை என்றால் அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க நீங்கள் முன்வர வேண்டும். இந்த கூட்டத்தில் படித்து அரசு வேலைக்கு வந்துள்ளவர்களில் அதிக அளவில் பணியில் உள்ள பெண்கள் தான் இருக்கிறீர்கள் இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் பெண்கள் நல்லா படிப்பார்கள் பணிக்கு செல்வார்கள் என்பது உறுதியாக தெரிகிறது.  அதனால் பெண் பிள்ளைகள் மட்டும் இருக்கிறது ஆண் பிள்ளைகள் இல்லை என்று யாரும் வருத்தப்படக்கூடாது.  மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு உடல் ரீதியான சத்து குறைபாடுகள் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதிக குழந்தை வேண்டாம் என்று நினைப்பவர்கள் மருத்துவத்துறையில் அறிவியல் ரீதியாக தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இயற்கையாக தடுக்க முடியாது. அதனால் குடும்ப நல அறுவை சிகிச்சை மேற்கொள்ள முன்வர வேண்டும். குறிப்பாக பெண்களை விட ஆண்கள் குடும்ப நல அறுவை சிகிச்சை மேற்கொள்ள முன்வர வேண்டும். குடும்ப நல அறுவை சிகிச்சை குறித்து அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது இருந்த போதும் சில பெண்கள் குடும்ப சூழ்நிலை மற்றும் சமுதாய பிரச்சனை உள்ளது என்ற காரணத்தை கூறி அறுவை சிகிச்சை மேற்கொள்ள முன்வராமல் அதிக அளவில் குழந்தைகளை பெற்று வருகிறார்கள் இது தவறான செயலாகும்.


 


 


 




 


 


கரூர் மாவட்டத்தில் ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை செய்வதற்கு தங்க தந்தை என்ற ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தங்க தந்தை திட்டத்தில் மிகவும் எளிமையான முறையில் கத்தியின்றி, இரத்தமின்றி அறுவை சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் செய்து வைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் ஆண்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 5 ஆயிரம் ரூபாய் பரிசாகவும், அத்துடன் அரசு நலத்திட்ட உதவிகளாக தொழில் தொடங்குவதற்கு வங்கி கடன்கள், இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்டவைகள் வழங்கி ஊக்கிவிக்கப்படுகிறது. தங்க தந்தை திட்டம் கரூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இதில் பயன்பெற ஆண்கள் முன் வர வேண்டும். மனைவியின் மீது அதிக அன்பு கொண்ட கணவர்கள் தாங்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முன்வர வேண்டும்.


குழந்தைகளை சுமந்து கொண்டிருக்கும் கர்ப்பிணி பெண்கள் பிரசவங்களை மருத்துவமனைகளில் மட்டும்தான் பார்க்க வேண்டும் அவ்வாறு பிரசவம் முடிந்தவுடன் அதே மருத்துவமனையில் கணவனோ அல்லது மனைவியோ குடும்ப நல அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பிரசவத்திற்கு ஒரு முறையும் குடும்ப நல அறுவை சிகிச்சைக்காக ஒரு முறையும் மருத்துவமனைகளுக்கு சென்று கால விரையத்தை தடுக்க வேண்டும். நமது குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சேர்த்து வைக்கப்படும் சொத்து எதுவென்றால் இரண்டு குழந்தையோடு நிறுத்திக் கொள்வது தான் எனத் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் இணை இயக்குனர்(மருத்துவ பணிகள்) மரு.ரமாமணி, துணை இயக்குனர்கள் மரு.சந்தோஷ்குமார் (சுகாதாரப் பணிகள்) மரு. ஸ்ரீபிரியா தேன்மொழி (குடும்ப நலன்), வட்டார மருத்துவ அலுவலர்கள் மரு. சிவகுமார், மரு. தியாகராஜன், மரு.சகுந்தலாதேவி, வட்டாட்சியர் கலியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.