தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதத்தில் அரசுத்துறையைச் சார்ந்த அலுவலர்கள் தீவிரப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணியின் மூலமாக, நோய்த்தொற்று ஏற்பட்டு தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். குறிப்பாக, தமிழக காவல்துதறயில் இதுவரை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உள்பட 84 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை தங்கள் இன்னுயிரை இழந்தவர்களின் 13 நபர்களின் குடும்ப வாரிசுகளுக்கு தலா ரூபாய் 25 லட்சம் வீதம் ரூபாய் 3.25 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 71 நபர்களில் 36 நபர்களுக்கான முன்மொழிவுகள் பெறப்பட்டு, அவர்களுக்கு தலா ரூபாய் 25 லட்சம் வீதம் ரூபாய் 9 கோடியை நிவாரணத் தொகையாக வழங்க தமிழக முதல்-அமைச்சரால் உத்தரவிடப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள 35 நபர்களுக்கான முன்மொழிவுகள் பெறப்பட்டவுடன் பரிசீலித்து, அவர்களுக்கும் தலா ரூபாய் 25 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.