தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் தினசரி 30 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழக அரசு விதித்த ஊரடங்கு காரணமாக, கொரோனா பரவலின் எண்ணிக்கை ஓரளவு குறைந்து வந்தாலும், உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், உயிரிழப்பை தடுப்பதற்கு தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.




தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் மாநில அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “மகாராஷ்ட்ரா, டெல்லி, கேரளம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொரோனா உச்சம் தொட்டுள்ளது. கேரள மக்கள்தொகை தமிழக மக்கள்தொகையில் பாதியை கொண்டது. கர்நாடகா நம்மைவிட குறைவான மக்கள் தொகையை கொண்டது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைகிறது. ஆனாலும், கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, தூத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்டங்கள் கவலையளிக்கிறது. சாதாரண ஊர்களிலும் கண்காணிக்க வேண்டியுள்ளது.




இந்த ஊரடங்கை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஊரடங்கின் இரண்டாம் பாகத்தில்தான் பலன் கிடைக்கும். பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. கும்பலாக இருக்கும் எந்த இடத்தையும் பொதுமக்கள் தவிர்க்கவேண்டும். தமிழக அரசு அனுமதித்துள்ள நேரத்தில்கூட, கடைகளில் கும்பலாக இருந்தால் செல்லவேண்டாம்” என்று கூறினார்.