சசிகலாவா? ஓ.பன்னீர்செல்வமா? அதிமுக பொதுச்செயலாளர் யார் எனும் அதிகார இழுபறி தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 28 முதல் 30 வரை இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா நடத்தப்படுகிறது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என 1979ல் எம்.ஜி.ஆர் அறிவித்தார். அன்று தொடங்கியே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த தினத்தில் அவரது நினைவிடத்துக்குச் சென்று அதிமுகவினர் மரியாதை செலுத்தி வருகின்றனர். முக்குலத்தோர் சமூகத்திலிருந்து அதிமுகவின் வாக்கு வங்கி அதிகமாக இருக்கும் நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் நினைவிடத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்குத் தங்கக் கவசம் அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
சரிகிறதா ஓ.பி.எஸ்.ஸின் செல்வாக்கு?
இதற்கிடையே ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் தொடர்ந்து அதிகார இழுபறி நீடித்துவருகிறது. ஒரு பக்கம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்துள்ள சசிகலா தொடர்ந்து ’சந்தனக்காட்டு வீரப்பன்’ வகையறாவாகக் கட்சி உறுப்பினர்களுடன் பேசும் ஆடியோவை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். மற்றொரு பக்கம் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கவே போவதில்லை என்பதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் உறுதியாக உள்ளனர்.
அரசு யாரைப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கும்?
இருந்தும் சசிகலா தமிழ்நாட்டின் பல முக்கிய நிகழ்வுகளுக்கு ஒரு அதிமுக உறுப்பினராகவே சென்று வருகிறார். இதற்கிடையேதான் தற்போது ’தேவர் ஜெயந்தி’ குறித்த சர்ச்சையும் எழுந்துள்ளது. பசும்பொன் முத்துராமலிங்கமத் தேவர் ஜெயந்தி விழாவுக்கு மரியாதை செலுத்துவதற்கான அனுமதி கோரி இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ள சசிகலா அதில் தன்னை அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதே அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களும் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை ஆட்சியர் அலுவலகம் சசிகலாவுக்கு அனுமதி அளிக்கும் நிலையில் அரசு சசிகலாவை அதிகாரபூர்வ பொதுச்செயலாளராக அங்கீகரிக்கிறது என்பதாகும்.
இதுகுறித்துக் கட்சித் தரப்பில் கூறுகையில், ‘அதிமுக ஒருங்கிணைப்பாளரும் சசிகலாவும் இருவருமே முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சசிகலா வெளியே வரும்வரை இந்தச் சமூகத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கான செல்வாக்கு அதிகமாக இருந்தது. ஆனால் தற்போதைய சூழல் அப்படி இல்லை. ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதே செல்வாக்கு இருந்தாலும் சசிகலாவுக்கான செல்வாக்கும் சற்று அதிகரித்துள்ளதைப் புறந்தள்ள முடியாது’ எனக் கூறுகின்றனர்.
சண்டையிடும் பூனைகளுக்கு இடையே குரங்கு அப்பம் பிரித்த கதையாகத் தற்போது அரசு, அதிமுக அதிகாரச் சண்டையில் சிக்கிக் கொண்டுள்ளது. சரியாக அப்பத்தைப் பிரித்துக் கொடுக்குமா அல்லது சார்புநிலையெடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.