டியூசன் நடத்தும் அரசு ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
டியூஷன் சென்டர் நடத்தும், வீடுகளில் டியூசன் எடுக்கும் அரசு ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், மாவட்டம் தோறும் சிறப்பு குழு ஒன்றை அமைக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சையைச் சேர்ந்த ராதா என்பவர் இடமாறுதல் கோரிக்கையை நீதிமன்றம் ரத்து செய்தது. அதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில், தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போது, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், “அரசு துறையில் பணி செய்யும் மற்ற பணியாளர்களுடன் ஒப்பிடும்போது ஆசிரியர்களுக்கான வேலை நாள் மற்றும் நேரம் குறைவானது. இதனால் ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது போன்ற பகுதிநேர வேலை செய்து வருகின்றனர். இது ஆசிரியர்களிடையே பணம் சம்பாதிக்க வேண்டும் எனும் பேராசையை அதிகரிப்பதாக உள்ளது” என்று தெரிவித்தார். மேலும், “இவை தொடர அனுமதித்தால் ஆசிரியர்களின் பணியில் மேம்பாட்டை எதிர்பார்க்க முடியாது. தற்போதுள்ள கல்வித்துறையின் நிலைமை நிச்சயம் சிறந்த செயல்பாட்டிற்கு உகந்ததாக இல்லை” என நீதிபதி வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும், “கல்வித்துறையில் இருக்கும் முறைகேடுகள், முரண்பாடுகள் உற்று நோக்கப்பட வேண்டும். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான ஊதியத்தை வழங்கவும் அரசு போதுமான அளவு தொகையை ஒதுக்குகிறது. ஆனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு தரமான கல்வியை ஆசிரியர்கள் வழங்குகிறார்களா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
அரசுப்பள்ளியில் பணியமர்த்தப்படும் ஆசிரியர்களின் தரத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் தரம் தனியார் பள்ளி மாணவர்களின் அளவிற்கு இல்லை. அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணி, பொறுப்புகள் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும். மெத்தனத்திற்கான காரணத்தை கண்டறிந்து, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களும் அறிவுத்திறன் மற்றும் நன்னடத்தை பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
தற்போது டியூஷன் வகுப்புகளை எடுப்பது அரசு ஆசிரியர்களுக்கு மற்றொரு தொழில் போலாகிவிட்டது.
பல உலக நாடுகளில் அரசு பள்ளிகள் மிகச் சிறந்த கல்வியை வழங்குபவையாக உள்ளன. ஆனால் தமிழக அரசு கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டிற்கான பெரும் அளவில் நிதியை ஒதுக்கிய பின்னரும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு போட்டியாக கூட அரசுப் பள்ளிகளை உருவாக்க இல்லாத நிலையே உள்ளது. இந்நிலை மாற்றப்பட வேண்டும்.
ஆசிரியர் சமூகம் பெரும்பாலும் அவர்களின் தேவைகளிலும், உரிமையிலுமே கவனம் செலுத்துகிறது. இதுதொடர்பாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது குடிமக்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டிய கடமைகள் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம். உரிமைகளும், கடமைகளும் பொதுவானவை.
தமிழகத்தில் உள்ள ஆசிரியர் கூட்டமைப்புகள் துறை ரீதியான விஷயங்களில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் கைகோர்த்துக் கொண்டு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர். இவை அனைத்தும் ஆசிரியர்களின் உரிமைகள் எனும் குடையின்கீழ் நடைபெறுகின்றன.
தற்போதுள்ள கல்வித்துறையின் நிலைமை நிச்சயம் சிறந்த செயல்பாட்டிற்கு உகந்ததாக இல்லை” எனத் தெரிவித்தார். இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
நீதிபதியின் உத்தரவுகள்:
- அரசு ஆசிரியர்கள் டியூசன் நடத்துவதைக் கண்காணிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் மாவட்டம் தோறும் சிறப்பு குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான முறைகேடுகள், புகார்கள், தொடர்பாக புகார் அளிக்க தொலைபேசி எண், அலைபேசி எண், வாட்ஸ்அப் எண் போன்றவற்றை உருவாக்கி அனைத்து கல்வித் துறை அலுவலகங்கள், அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் அனைவரும் பார்க்கும் விதமாக விளம்பரப்படுத்த வேண்டும்.
- அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணித்தரம், கற்பிக்கும் விதம், ஆசிரியரின் கல்வித்தரம் போன்றவை குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் மதிப்பீடு செய்து, திருத்தங்கள் மற்றும் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவற்றில் தயக்கம், சுணக்கம் காட்டும் ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்கும் தமிழக பள்ளிக்கல்வித்துறை தலைமை செயலர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அதன் அடிப்படையில் மாவட்ட அளவிலான அதிகாரிகளால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை தலைமைச் செயலரும், பள்ளிக்கல்வி துறையின் தலைமை அதிகாரியும் கண்காணிக்க வேண்டும்..
- பள்ளி வளாகம் மற்றும் வெளியே ஆசிரியர்களின் நடத்தை குறித்து கண்காணிக்கப்பட வேண்டும். விதி மீறி நடப்போர் மீது ஒழுங்கு ரீதியிலான பணிமாறுதல் உத்தரவு வழங்கப்பட வேண்டும்.
- தமிழகத்திலுள்ள பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அரசு ஆசிரியர் கூட்டமைப்பு தொடர்பான தகவல்கள், புகார்கள், ஆவணங்களை சேகரித்து, அவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டால் அந்த சங்கங்கள் மற்றும் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்த விதிகள் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பாக தமிழக முதன்மை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை ஏப்ரல் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.