ஜல்லிக்கட்டில் வென்றால் அரசு வேலை; அமைச்சர் உதயநிதி அறிவிப்பு என்னவானது?- அன்புமணி

போட்டிகளில் அதிக காளைகளை அடக்குபவர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கடந்த ஆண்டு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

Continues below advertisement

ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெல்லும் காளைகள், வீரர்களுக்கு  டிராக்டர் பரிசு வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அரசு வேலைவாய்ப்பும் வழங்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Continues below advertisement


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


''மதுரை மாவட்டத்தில் நாளை தொடங்கி நடைபெறவுள்ள புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றிபெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளை பிடி வீரர்களுக்கும் முதல் பரிசாக டிராக்டர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாடு பிடி வீரர்களுக்கு மகிழுந்துக்குப் பதிலாக டிராக்டர் வழங்கவேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இப்போது டிராக்டர் பரிசாக வழங்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக ஜல்லிக்கட்டு அமைப்பாளர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.


அவனியாபுரத்திலும் டிராக்டர் பரிசு தேவை 


பாலமேடு ஜல்லிக்கட்டில் காளைகளின் உரிமையாளர்கள், காளையை அடக்கும் வீரர்கள் என இருவருக்குமே டிராக்டர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவனியாபுரத்தில் காளைகளின் உரிமையாளர்களுக்கு மட்டும் டிராக்டர் பரிசாக வழங்கப்படும் என்றும், காளைகளை அடக்கும் வீரருக்கு மகிழுந்து பரிசாக அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவனியாபுரத்திலும் காளைகளை அடக்கும் வீரருக்கு மகிழுந்துக்குப் பதில் டிராக்டரை பரிசாக வழங்கவேண்டும். பரிசாக வழங்கப்படும் டிராக்டருடன் பலவகையான கலப்பை கருவிகளையும் வழங்கவேண்டும். 


அரசு வேலை பரிசீலிப்பு என்னவானது?


ஜல்லிக்கட்டு போட்டிகளில் அரசு சார்பிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் சார்பிலும் வழங்கப்படும் பரிசுகளும் வாழ்வாதாரம் வழங்குபவையாக இருக்க வேண்டும். போட்டிகளில் அதிக காளைகளை அடக்குபவர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கடந்த ஆண்டு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த வாக்குறுதியையும் உடனடியாக செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்''.

இவ்வாறு அன்புமணி வலியுறுத்தி உள்ளார். 

தமிழ்நாட்டில் நாளை தை 1 பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அடுத்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் ஆகியவை கொண்டாடப்பட உள்ளன. இந்த தினங்களில் தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக் கட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த நிலையில் ஜல்லிக்கட்டில் வெற்றி பெறுவோருக்கு அரசு வேலை வாய்ப்பு கோரிக்கை எழுந்துள்ளது. 

Continues below advertisement