சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடத்தின் அருகில் ரூபாய் 39 கோடி செலவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது.இதையடுத்து அதற்கான அதிகாரபூர்வ அரசாணை இன்று வெளியிடப்பட்டது. சுமார் 2.21 ஏக்கர் பரப்பளவில் இந்த நினைவிடம் அமைக்கப்பட உள்ளது.
முன்னதாக,சென்னை காமராஜர் சாலையில் உள்ள மெரினா கடற்கரையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். 39 கோடி ரூபாய் செலவில் 2.21 ஏக்கரில் அவருக்கான நினைவிடம் கட்டப்படும் என பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார். நினைவிடத்தில் கருணாநிதியின் வாழ்க்கை சிந்தனை அடங்கிய நவீன ஒளிப்படங்கள் இடம்பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார். அரைநூற்றாண்டு காலத்துக்கு தமிழ்நாட்டின் நிரந்தரத் தலைப்புச் செய்தியாக இருந்தவர் கருணாநிதி, நின்ற தேர்தலில் எல்லாம் வென்றவர், 13 சட்டமன்றத் தேர்தல்களிலும் தலைகுனியாதவர், தோல்வி அவரைத் தொட்டதே இல்லை எனப் பேரவையில் முதலமைச்சர் இந்த அறிவிப்பின்போது கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார். கருணாநிதியின் நினைவிடத்துக்கான அறிவிப்பை சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ந் தேதி மறைந்ததை அடுத்து அவரது உடல் சென்னை ராஜாஜி அரங்கத்தில் பார்வையாளர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்கு அப்போதைய அரசால் இடம் தர மறுக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நினைவிடத்துக்கு அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்துதான் தற்போது முதலமைச்சர் தனி நினைவிடத்துக்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் வெளியிட்டிருந்தார்.சட்டப்பேரவை நூற்றாண்டினையொட்டி கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்