உயர் அதிகாரிகள் டார்ச்சர் காரணமாக கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் உதவி ஆய்வாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் பெண் ஆய்வாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நெல்லை காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாநகர காவல் துறையில் பாளையங்கோட்டை போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மகேஸ்வரி, இந்த நிலையில் மகேஸ்வரி நேற்று திடீரென அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை எடுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அவர் பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பணிச்சுமை காரணமாகவும், உயரதிகாரிகளின் டார்ச்சர் காரணமாகவும் மகேஸ்வரி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக பாளையங்கோட்டை போக்குவரத்து பிரிவில் ஆள் பற்றாக்குறை அதிகளவு இருப்பதால் போக்குவரத்து காவலர்களுக்கு மிகுந்த பணிச்சுமைக்கு ஆளானதாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், ஆட்சியர் குடியிருப்பு ஏராளமான கல்வி நிலையங்கள் என பல்வேறு முக்கிய அலுவலகங்கள் இயங்கும் பகுதி என்பதால் பாளையங்கோட்டை எப்போதுமே நெருக்கடியுடன் காணப்பட கூடிய பகுதியாகும், ஆனால் பாளையங்கோட்டை போக்குவரத்து காவல் துறையில் மிக குறைந்த அளவிலேயே காவலர்கள் பணியாற்றுகின்றனர்.
பாளையங்கோட்டை காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் அருணாசலம் தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக சமீபத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வரை சென்றது, இருப்பினும் அடுத்தடுத்து இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக நெல்லை மாநகரில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக ஹைகிரவுன்ட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பழனி கடந்த மாதம் 27 ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். உயரதிகாரி திட்டியதன் காரணமாகவே பழனி தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகன் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் தான் பெண் காவல் ஆய்வாளர் மகேஷ்வரி என்பவர் நேற்று அளவுக்கு அதிகமாக மாத்திரையை எடுத்து கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார், பெண் காவல் ஆய்வாளர் பணிச்சுமை காரணமாக தற்கொலை முயற்சி செய்த சம்பவம் நெல்லை மாநகர காவல் துறையில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, நெல்லை மாநகரில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் பணிச்சுமை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாநகர காவல் துறை உயர் அதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக பல்வேறு காவலர்கள் உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பலர் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு உத்தரவின்படி காவலர்களுக்கு வார விடுமுறை நெல்லை மாநகரில் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் தீபாவளி பண்டிகை அன்று கனரக வாகனம் மாநகர பகுதியான வண்ணாரப்பேட்டை வழியாக சென்றுள்ளது. இதற்காக நேற்று முன் தினம் போக்குவரத்து காவல் ஆய்வாளரான மகேஷ்வரிக்கு மெமோ வழங்கப்பட்டு உள்ளது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த மகேஷ்வரி இது போன்ற தற்கொலை முடிவு எடுத்துள்ளார் என அவரின் காவல்துறை நண்பர்கள் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது மகேஷ்வரி நல்ல நிலையில் இருக்கிறார் என்றும் தெரிவித்தனர்.
தந்தை இறந்தபோதும் காவல்துறை அணிவகுப்பில் கலந்து கொண்டவர்
தற்போது தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் ஆய்வாளர் மகேஸ்வரி கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது தனது தந்தை உயிரிழந்த செய்தி கேட்டும் சுதந்திர தின அணிவகுப்பை தலைமையேற்று நடத்தி விட்டு அதன் பிறகே தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார், இவரது கணவரும் நெல்லை நுண்ணறிவு பிரிவில் உதவி காவல் ஆய்வாளராக உள்ளார். இதுபோன்று காவல்துறையில் நற்பெயர் எடுத்த அதிகாரிகள் மனம் தளர்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்யும் சம்பவம் சமூக ஆர்வலர் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் கேட்டபோது, காவல்துறையில் பணியை விரும்பி செய்தால் பணியில் சுமை என்பது ஏதும் இல்லை. 24 மணி நேரமும் அலுவலகத்தில் என்னை சந்தித்து காவலர்கள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். மாதம் ஒரு முறை காவலர்களின் குறை தீர்க்கவே கூட்டம் ஒன்று நடைபெறுகிறது , அதில் தங்களது குறைகளை தெரிவிக்கலாம், மக்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பணி என்பதால் சமரசம் காட்ட முடியாது எனவும் தெரிவித்தார். மேலும் கொடுத்த மெமோவிற்கு அவர் உரிய விளக்கம் கொடுத்து இருக்கலாம், தற்கொலை என்பது தீர்வாகாது எனவும் அவர் தெரிவித்தார்.