CM Stalin: தமிழ்நாட்டை காப்பாற்றி விட்டோம். வரும் தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்று திருவாரூரில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.


"இந்தியாவை காப்பாற்ற வேண்டும்”


திருவாரூர் அருகே பவித்திரமானிக்கம் தனியார் திருமண அரங்கில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் இல்ல திருமண விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்  ஸ்டாலின், "மக்களுக்கும் விவசாயிகளுக்காகவும் பல்வேறு போராட்டங்களை நடத்திய பெருமை செல்வராஜிக்கு உண்டு. எம்பி செல்வராஜ் மகளின் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றதற்கு பெருமகிழ்ச்சி அடைகிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது உள்ள கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் என்று நான் உறுதியாக சொல்கிறேன்.


இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். இன்று சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிற பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனென்றால் தமிழ்நாட்டை காப்பாற்றி விட்டோம். தற்போது இந்தியாவை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். இந்தியாவை காப்பாற்றுவதற்கு தான் ’இந்தியா' கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.


"மூம்பையில் மூன்றாவது கூட்டம்”


தொடர்ந்து பேசிய அவர், "ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1ஆம் தேதியில் மும்பையில்  இந்திய கூட்டணியின் மூன்றாவது கூட்டம் நடைபெற உள்ளது. அதில் நானும் பங்கேற்க உள்ளேன். இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஒரு நல்ல ஆட்சி உருவாக்கிட அனைவரும் காரணமாக இருந்தீர்கள். அதே போல் ஒன்றியத்தில் நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் ஒரு நல்ல ஒன்றிய அரசு அமைய நீங்கள் காரணமாக இருக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை இந்த திருமணத்தில் தொடங்கி வைக்க வேண்டும் என சிபிஐ மாநில செயலர் முத்தரசன் குறிப்பிட்டார். திருவாரூரில் தான் தேர்தல் பிரச்சாரம் தொடங்க வேண்டும் என நினைத்தேன். அதே போல் இந்த மேடையில் நின்று பிரச்சாரத்தை தொடங்கி உள்ளேன்” என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.


9 வருடத்தில் மக்களுக்கு என்ன செய்தீர்கள்?


மேலும், "கடந்த 9 வருடமாக மத்தியில் மோடி தலைமையில் பாஜகவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த 9 வருடத்தில் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று சொல்ல முடியுமா? தேர்தலுக்கு முன்னாள் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய கருப்பு பணங்களை எல்லாம் கைப்பற்றி இந்தியாவிற்கு கொண்டுவந்து நாட்டு மக்கள் அத்தனை பேருக்கும் தலா 15 லட்சம் ரூபாய் கொடுக்கப் போறேன் என அறிவித்தார் மோடி. நான் பல கூட்டங்களில் கேட்டேன், 15 லட்சம் வேண்டாம் ஒரு 15 ஆயிரம் மட்டும் அல்லது 15 ஆயிரம் கூட வேண்டாம் 15 ரூபாய் கொடுத்தாங்களா? இதுவரை கிடையாது.  நாட்டில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு எல்லாம் வேலை வாய்ப்பு தருவோம் என்றார். ஆனால் செய்தார்களா? வேலைகள் தான் பறிக்கப்பட்டுள்ளது. இதுதான் மத்தியில் இருக்கக் கூடிய ஆட்சியின் நிலை" என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.