கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து திட்டமிட்டு செய்து வரும் தமிழ்நாடு அரசு, அடுத்த அதிரடியாக அமைத்திருக்கும் குழுதான் கொரோனா Task Force. அனைத்து அரசுகளும் அமைப்பதுதான் என்றாலும், அதன் தலைவர் யார் என்பதுதான் எதிர்பார்ப்பை எகிற வைக்கவும் நம்பிக்கையை அதிகப்படுத்தவும் காரணமாகிறது.


பூர்ணலிங்கம் ஐ.ஏ.எஸ் – தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை செயலாளராகவும் மின்வாரிய தலைவராகவும், ஜவுளித்துறை செயலாளராகவும் பணியாற்றியவர். ஆனால் TNMSC என அழைக்கப்படும் தமிழ்நாடு மருந்து பொருள் சேவை கழகத்தில் பூர்ணலிங்கம் செய்த செய்கை என்பது அடிப்பொலி. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த முத்துசாமி மருந்து பொருள் கொள்முதல் மற்றும் விநியோகத்தை மேற்கொள்ள ஒரு தனி அமைப்பை அமைக்க வேண்டுமென வலியுறுத்த, உலக சுகாதார அமைப்பின் ஆய்வுகளை எல்லாம் பிரித்து மேய்ந்து இப்படித்தான், இதற்குத்தான் என அமைக்கப்பட்டதுதான் TNMSC.




அமைத்தாலும் கூட அதன் செயல்பாடுகள் என்னவோ பெரிதாக இல்லை. அப்போதுதான் ஆட்சி மாற்றம். பூர்ணலிங்கத்தை தமிழ்நாடு மருந்து பொருள் சேவை கழகத்தின் தலைவராக நியமித்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. அதுதான் டர்னிங் பாய்ண்ட். இந்த அமைப்பின் முக்கிய பணியே, மருந்துகள், மருத்துவ உபகரணங்களை வாங்குவதும் மருத்துவமனைகளுக்கு விநியோகப்பதுமே. தொடங்கிய நோக்கம் என்ன என்பதை உணர்ந்தார் பூர்ணலிங்கம். அடுத்தடுத்து அதிரடிகள். அத்தனையும் உரிய ஆய்வுக்கு பின்னர் நடந்தது. தமிழ்நாடு மருத்துவமனைகள் அனைத்துக்கும் சென்றார், என்ன நடக்கிறது என தெரிந்து கொண்டார். ஏறக்குறைய 90 சதவீத நோய்கள் அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியாக இருந்தது. மக்களுக்கு அதற்கான மருந்துகளே தேவையாக இருந்தது. அதோடு மூன்று முக்கிய விஷயங்களை உறுதிப்படுத்த நினைத்தார். மருந்துகளை வாங்குதல், தரம் பார்த்தல், விநியோகம் செய்தல்.


விட்டார் உலகளாவிய டெண்டர். ரொம்ப ஸ்ட்ரிக்டான டெண்டர் முறையாக இருந்தது. சொந்த தொழிற்சாலை, தரச்சான்று, ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் நிகர லாபம் இருக்கும் கம்பெனி மட்டுமே விண்ணப்பிக்கலாம். இதுதான் விலை, தரமும் முக்கியம் என்றார். அதோடு விண்ணப்பம் செய்த நிறுவனங்கள் அனைத்துக்கும் நேரடியாக சென்றார். பார்வையிட்டார், மருந்து வாங்குபவர்களை சந்தித்தார், பின்னரே நிறுவனங்களை அனுமதிப்பது பற்றி பரிசீலித்தார். சிலர் முரண்டு பிடிக்கலாம், தர மறுக்கலாம், பாதியில் ஒடலாம் என்பதால் ஒரு நிறுவனத்தை மட்டும் நம்பாமல், அடுத்தடுத்த நிலைகளில் நிறுவனங்களை தேர்வு செய்து வைத்தார். நேரடி கொள்முதல் என்பதால் மிக குறைந்த விலையில் மருந்துகள் கிடைத்தன. பலருக்கும் ஆச்சரியம். மருந்துகள் வாங்கியாச்சு. ஆனால் எப்படி விநியோகிப்பது? சென்னைக்கு வந்து மருந்துகளை வாங்கிச் செல்ல மருத்துவமனைகளால் முடியவில்லை. யோசித்தார் பூர்ணலிங்கம்.




தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் TNMSC-ன் வார் ரூம்கல் அமைக்கப்பட்டன. கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகளை நேரடியாக அனுப்பி வைக்கச் சொன்னார். தேவைக்கு அதிகமாக மருந்துகள் எப்போதும் ஸ்டாக் வையுங்கள் என்றார். ஏனெனில் நம்மூரில் சீசனில் ஏற்படும் நோய்களுக்கு திடீரென மருந்து தட்டுப்பாடு வந்துவிடும். எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்தது. ஆனால் ஏதோ அவர் மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. மருந்துகள் வாங்கும் போது தரமாக வாங்குகிறோம். ஆனால் அவ்வப்போது அதனை சோதிக்காமல் விட்டு விட்டோமே? ஏதாவது நடந்தால் பெரிய இழப்பல்லவா? என நினைத்தார்.


இவ்வளவு மருந்து வாங்கும் போது தரமும் முக்கியம். அதனால் மருந்து பொருள்களை அனுப்பும் போது தரப் பரிசோதனை கிடையாது என்றார். மருந்துகள் வந்து சேர்ந்ததுமே தரப் பரிசோதனை. முடிவு வரும் வரை பணம் கிடையாது. மருந்து கம்பெனிகளை பொருத்தவரை தரப் பரிசோதனை நிறுவனங்களோடு அவர்களுக்கு மிகப்பெரிய உறவு உண்டு. பல சமயங்களில் மருந்தின் தரம் குறைவு என்றாலும் நன்றாக இருப்பதாக சொல்ல வைக்கப்படலாம் என பலரும் சொன்னார்கள்.ஆகா, இப்படியும் நடக்கலாமா என எண்ணி, ஒரே மாதிரியை பல இடங்களுக்கு அனுப்பினார். முடிவுகளில் மாறுபாடு இருந்தால், வேறு இடத்துக்கு அனுப்புவார். எந்த மருந்து, எந்த சோதனை கூடத்துக்கு அனுப்பப்பட்டது என்பது அவருக்கும் அவரது சகாக்களுக்கும் மட்டுமே தெரியும்.  தரம் மேட்டர் ஓவர்.






இப்போது புதுப்பிரச்னையாக வந்தததுதான் மருந்து பதுக்கல். மருத்துவமனைகளுக்கு தருகிறோம் சரி, அது பதுக்கப்பட வாய்ப்புள்ளதை புரிந்து கொண்டார். வந்தது கிரெடிட் கார்ட் சிஸ்டம். அனைத்து மருத்துவமனைகளுக்கும் ஒரு பாஸ்புக் கொடுக்கப்படும் , அதில் குறிப்பிட்ட அளவு பணம் கிரெடிட் செய்யப்பட்டிருக்கும்.  அதனை வைத்து TNMSC  வார் ரூம்களில் மருந்து வாங்கிக் கொள்ளலாம். மருந்து வாங்க வாங்க பணம் குறையும். அதிகமாக தேவைப்பட்டால், சேர்மனை அணுகலாம், பாஸ்புக் பணம் அதிகரித்துக் கொடுக்கப்படும். அதிலுல் சில வழிகாட்டுதல்கள் உருவாக்கி மருத்துவமனைகளுக்கும் செக் வைத்தார்.




முதல் ஆண்டிலேயே 32 கோடி ரூபாய் இழப்பு தவிர்க்கப்பட்டது. மருந்துகளை வீணாக்குவது தவிர்க்கப்பட்டது. பதுக்கல் இல்லாமல் போனது. பூர்ணலிங்கம் சாதித்தார். கேரளா, ஒடிசா என மாநிலங்கள் வரிசை கட்டி இந்த மாடலை எடுத்துக் கொண்டன. இப்படி தமிழகத்தின் மருந்து தேவையை போக்கிய முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் , TNMSC தலைவர்தான் இப்போது ஸ்டாலின் தேர்வு செய்திருக்கும் கொரோனா Task Force தலைவர்.