கொரோனா என்ற ஒற்றை சொல் பல உலக நாடுகளை திணற வைத்தது மட்டுமின்றி பலரின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்வினை மாற்றி அமைத்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா தொற்றின் பரவலை தடுக்க கடந்த ஆண்டு முதல் மாதக்கணக்கில் நீண்டுகொண்டிருந்நத ஊரடங்கின் காரணமாக, சாமானிய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. தினந்தோறும் உழைத்து தங்களது வாழ்வினை நடத்தியவர்கள் செய்வதறியமால் திகைத்து வருகின்றனர். ஒரு நாள் பொழுதினை கழிப்பதை கூட ஒரு யுகமாக மாற்றிவிட்ட கொரோனா, ஊரடங்கில் அனைவரின் மனதிலும் இருந்த மனிதாபிமானத்தை துளிர்க்க வைத்துள்ளது என்பதை மறுக்க முடியாது. வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய மாநில அரசுகள் பல திட்டங்கள், சலுகைகள், நிவாரண உதவிகள் அறிவித்தாலும் அவை போதுமா என்பது பெரிய கேள்விக்குறிதான். பல இயற்கைப் பேரிடர்களின்போதும் இதுபோல வாழ்வாதார சிக்கல் தலைவிரித்தாடியது. அப்போது, அரசு மட்டுமின்றி பல தன்னார்வலர்களும் களத்தில் இறங்கி மக்கள் துயர் துடைத்தனர். கொரோனா காலத்திலும் இப்படியான தன்னார்வலர்கள் பலர் மக்களுக்கு உதவ முன் வந்து தங்கள் பணிகளை மேற்கொண்டிருக்கின்றனர்.



இந்தவகையில் தூத்துக்குடியை சேர்ந்த வின்மீன் அறக்கட்டளையை சேர்ந்த பாலா தனது குடும்பத்தினரின் ஆதரவு மற்றும் நண்பர்களோடு இணைந்து கடைகள் மூடப்பட்டதால் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு உணவளித்து வருகிறார். இதற்காக தினமும் 10 கிலோ அரிசி, முட்டையுடன் உணவு தயார் செய்து தனது நண்பர்களுடன் தூத்துக்குடி நகர் பகுதிக்குள் தெரு தெருவாக சென்று உணவளித்து வருகின்றார். இதனுடன் தினமும் 60 முட்டைகளை அவித்து அதனை கலவையாக செய்து தினமும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை தங்களது நண்பர்களோடு இணைந்து இருச்சக்கர வாகனத்தில் தூத்துக்குடி வட்டகோவில், பாளை ரோடு, அண்ணாநகர், கடற்கரை சாலை என சுற்றி வரும் இவர்கள் சுமார் 100 க்கும் மேற்பட்ட நாய்களுக்கு உணவளித்து வருகின்றனர்.முதல் நாளில் உணவளிக்க செல்லும் போது தெருவோர நாய்கள் இவர்களை கண்டதும் குலைக்க துவங்கி உள்ளது. இதனை தொடர்ந்து மறுதினம் முதல் நன்றியுள்ள ஜீவன்கள் தங்களை எதிர்பார்த்து நிற்பது மனதை வருடுவதாக கூறுகிறார் வின்மீன் அறக்கட்டளை பாலா..



 

இதற்காக தனது நண்பர்கள் , சமூக ஆர்வலர்கள் , நல்லோர்கள் உதவி அளித்து வருவதாக கூறும் அவர், கொரோனா காலத்திற்கு பின்னரும் நன்றியுள்ள இந்த ஜீவன்களுக்கு தொடர்ந்து உணவு அளிக்க வேண்டும் என்பது தங்களது ஆசை என்கிறார். மனிதாபிமானம் கொண்டவர்கள் இந்த ஊரடங்கில் உணவிற்கு சுற்றித் திரியும் உங்கள் தெருக்களில் உள்ள நாய்களில் உங்களால் முடிந்த உணவுகளை அளித்து அதன் பசிப்பிணியை போக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்