இந்தியா என்னும் உயர்ந்த சிந்தனையைக் கட்டமைக்கத் தனது உடல் - பொருள் என அனைத்தையும் ஈந்து இந்நாட்டின் உயிராகிப் போனவர், அண்ணல் காந்தியடிகள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியச் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படுத்திட அமைதி வழியில் போராடிய அவர், ஒரு மதவெறியனின் வன்முறைக்குப் பலியான இந்நாளில், ஒற்றுமை மிளிரும் சமூகமாகத் திகழ்ந்திட நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்போம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காந்தியின் நினைவு நாள்:
காந்தியின் 76-ஆவது நினைவு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ்நாடு ஆளுநர் .ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30.01.2023) சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
“காந்தியும் உலக அமைதியும்”
மேலும், காந்தியடிகளின் தியாக வரலாற்றினை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், அன்னாரது 76ஆவது நினைவு நாளினை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்இன்று (30.01.2023) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் “காந்தியும் உலக அமைதியும்” என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த சிறப்புப் புகைப்படக் கண்காட்சினை திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.
புகைப்படக் கண்காட்சி
இப்புகைப்படக் கண்காட்சியில் உத்தமர் காந்தியடிகளின் அகிம்சை வழியிலான சுதந்திரப் போராட்ட வரலாற்றினையும், அன்னார் காட்டிய பாதையில் தற்போதைய உலக அமைதியினை வழியுறுத்தும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், புத்தகங்களைக் கொண்டு உத்தமர் காந்தியடிகளின் உருவமும் அமைக்கப்பட்டுள்ளது.
இப்புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள், கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள் பார்வையிட ஏதுவாக 30.01.2023 முதல் 05.02.2023 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு புகைப்படக் கண்காட்சியை அனைவரும் கண்டுகளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றும் அனுமதி இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.