எதிர்ப்பை மீறி பார் - பொதுமக்கள் முற்றுகை.
கரூர் மாவட்ட கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி ஏற்கனவே பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், அதை பொருட்படுத்தாமல் பார் அமைக்கும் பணியில் மேற்கொள்ளப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் விஏஓ அலுவலகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் வாரச்சந்தை சமுதாயக்கூடம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடையருகே குடியிருப்புகள் உள்ளன. டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்கள் மது பாட்டில்களை வாங்கி சாலையோரம் வாரச்சந்தை மற்றும் சமுதாயக்கூடம் விவசாய நிலத்தில் அமர்ந்து குடித்துவிட்டு, மது பாட்டில்களை உடைத்து வீசிவிட்டு செல்கின்றனர். மேலும், இப்பகுதி மக்கள் சாலையில் செல்லும் போது மதுபோதையில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியும் ஆபாசமாக பேசியும் வந்தனர். மது போதை நபர்களால் பொதுமக்கள், பெண்கள், விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வந்தனர்.
இந்நிலையில் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் கிராம மக்கள் சார்பில் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி கலெக்டரிடம் பலமுறை மனுக்கள் அளித்தனர். ஆனால், நடவடிக்கை எடுக்காததால் ஒரு மாதத்துக்கு முன்பு அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். இதை அடுத்து வருவாய்த்துறையினர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பிப்ரவரி 12 டாஸ்மாக் கடை வேறு இடத்திற்கு மாற்றப்படும் என உத்தரவாதம் அளித்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக டாஸ்மாக் பார் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த டி.எஸ்.பி ஸ்ரீதர், லாலாபேட்டை போலீசார், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ், டாஸ்மாக் உதவி மேலாளர் மதிவாணன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பார் கட்டுமான பணி உடனே நிறுத்தப்படும். வரும் 12 ஆம் டாஸ்மாக் கடை வேறு இடத்துக்கு மாற்றப்படும் என உத்தரவாதம் அளித்தனர். உறுதி அளித்தபடி கடையை அகற்றாவிட்டால் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் அறிவித்து தற்காலிகமாக போராட்டத்தை விளக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.