கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றார். பெருந்தொற்றுக்கு மத்தியில் பொறுபேற்ற திமுக, கொரோனா நிலைமையை நன்றாகவே கையாண்டது. கொரோனா தடுப்பூசியை செலுத்துவதில் முனைப்பு காட்டியது.


அதேபோல, மழைக்காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மேயர் முதல் முதலமைச்சர் வரை அனைவரும் களத்தில் சென்று பணியாற்றினர். இது, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட ஆய்வு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.


இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் கூட ஆய்வு பணிகளை மேற்கொள்வது குறித்து பேசிய அவர், "முதலமைச்சருக்கு சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை என ஆபீஸ் டைமிங் கிடையாது. இந்தாண்டு கனமழை பெய்தபோது சென்னையில் மக்கள் எந்த பாதிப்பும் இன்று நிம்மதியாக இருந்ததற்கு நம் (திமுக) அரசு தீவிரமாக மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையே காரணம்.


அதில், சில வேலைகள் மீதி இருப்பதை முன்கூட்டியே சொல்லி இருக்கிறேன். மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தேன். மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதையும் நேரில் பார்த்தேன்.


கிண்டியில் கட்டப்பட்டு வரும் உயர்தர பல்நோக்கு மருத்துவமனையின் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்தேன். முதலமைச்சர் என்கிற முறையில் நானே நேரடியாக ஆய்வு மேற்கொள்ளும்போது அதிகாரிகள் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பெறுவார்கள்.


அதனால், திட்டங்களை நாம் நினைப்பதை விட வேகமாக முடிக்கலாம். அதனால்தான், கள ஆய்வுக்கு முக்கியத்துவம் தருகிறேன்" என்றார்.


ஆட்சி நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து சமூக வலைத்தளங்களிலும் மக்களிடம் எழும் கேள்விகளுக்கும் உங்களில் ஒருவன் பதில்கள் தொடர் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்து வருகிறார். இந்த தொடரில்தான், முதலமைச்சர் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார்.


கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் குறித்து பேசிய ஸ்டாலின், "களப்பணி என்பது எனக்கு புதிது அல்ல. களத்தில் இருந்து வந்தவன் நான். களப்பணி ஆற்றிய முன்னுக்கு வந்தவன். மேயராக இருக்கும்போது பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி இருக்கிறேன். தலைமை செயலகத்தில் இருந்து திட்டங்களை உருவாக்குகிறோம்.


 



சட்டப்பேரவையில் அறிவிக்கிறோம். இந்த திட்டங்கள் எல்லாம் எவ்வளவு வேகமாக செயல்படுத்தப்படுகிறது என்பதை முதலமைச்சர் அறையில் இருக்கும் டாஷ்போர்டு மூலம் பார்த்து கொண்டு வருகிறேன்.


இத்திட்டங்களை நேரில் பார்த்து முடுக்கிவிடுவதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவிருக்கிறேன். அதற்கான செயல்திட்டம்தான் கள ஆய்வில் முதலமைச்சர்" என்றார்.


ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் குறித்து பேசிய அவர், வரும் அனைத்து தேர்தல்களிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.