இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கு கெளரவ டாக்டர் பட்டத்தை காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம் வழங்குகிறது. நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கிறார். 


திண்டுக்கல் காந்தி கிராம  கிராமிய பல்கலைகழகத்தில் 36வது பட்டமளிப்பு (நாளை) நவம்பர் 11ம் தேதி நடைபெறுகிறது, இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். 


பட்டமளிப்பு விழாவிற்கு வருகை புரிவதற்கு முன்பாக பிரதமர் மோடி, பெங்களூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் சின்னாளப்பட்டி கிராமத்தில் இறங்கி காந்தி கிராம பல்கலைக்கழகத்திற்கு வருகிறார். 


கூடுதல் பாதுகாப்பு:


காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் முக ஸ்டாலின், ஆளுநர் ரவி ஆகியோர் மதுரை விமான நிலையத்திற்கு வருவதையொட்டி கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் 4 துணை ஆணையர்களின் மேற்பார்வையில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, சுமார் 1,500க்கு மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 






இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம்: 


நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கிறார்.கடந்த ஜீலை மாதம் இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன எம்பி பதவி வழங்கப்பட்டது. இதுவரை பிரதமர் மோடியும், இசையமைப்பாளர் இளையராஜாவும் நேருக்குநேர் சந்திக்காத நிலையில், இந்த நிகழ்ச்சிமூலம் முதன் முறையாக சந்திக்க இருக்கின்றனர். 


இளையராஜாவுக்கு எம்பி பதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டபோது, பிரதமர் மோடி தனது ட்விட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.