தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தொடர் புகார்கள் வரும் நிலையில், தலைநகரான சென்னையிலேயே தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.   


      


சென்னை அபிராமபுரத்தில் உள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது மக்கள் தடுப்பூசி போடுவதற்கு நீண்ட வரிசையில் காலை முதலே காத்துக்கிடக்கின்றனர். ஆனால் குறைந்த அளவிலேயே தடுப்பூசிகள் இருப்பதாகவும் வந்துருக்கும் அனைவருக்கும் இன்று போட முடியாது என கூறி மருத்துவமனை ஊழியர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர். கோவேக்சின் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இரண்டாவது டோஸ் போடுவதற்காக வந்தவர்கள் சுகாதார ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  கடந்த 3 நாட்களாக கோவேக்சின் தடுப்பூசி போடுவதற்காக வந்தும், பாற்றாகுறை இருப்பதாக கூறி ஊழியர்கள் திருப்பி அனுப்புவதாகவும், எப்போதுதான் எங்களுக்கு 2வது தவணை தடுப்பூசி போடுவீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.     



மருத்துவமனை தரப்பிலோ, இன்று எங்களிடம்  200 கோவிசீல்ட் தடுப்பூசிகள் மட்டுமே இருப்பில் இருப்பதாகவும் மற்றவர்கள் இன்னும் 3 நாட்கள் கழித்து வருமாறும் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அதனை ஏற்காத பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.