திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஊசி தட்டுப்பாடு என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.



திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ச்சியாக தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தோற்று இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், இதன் காரணமாக பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றனர்.  இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில்  தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. ஆனால், வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தடுப்பூசி மையத்திலிருந்து தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படாமல் இருப்பதால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இது போன்ற குற்றச்சாட்டு மாவட்டத்தில் இருக்கக் கூடிய பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.




உதாரணமாக கோவிஷில்டு, கோவாக்சின்  ஆகிய தடுப்பூசிகள் முதலில் 28 நாட்கள் கழித்து இரண்டாவது சுற்று போடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர்  கோவிஷீல்டு தடுப்பூசி போடுவதற்கு மட்டும்  6 முதல் 8 வாரத்திற்குள் போட்டுக்கொள்ளலாம் என கால நீட்டிப்பு செய்யப்பட்டது. இதனைக் காரணம் காட்டி இரண்டாவது சுற்று போட வருபவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வந்தநிலையில். தற்போது தடுப்பூசியே இல்லை எனக்கூறி  திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இதன் காரணமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதி சீட்டு வாங்கும் இடம் மற்றும் ஊசி போடும் இடங்களில் பொதுமக்களுக்கும், பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 38000 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 6,060 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் முதல் ஊசியை  4451 நபர்களும்,  இரண்டாவது ஊசியை 1615 நபர்களும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். நாளொன்றுக்கு மாவட்டம் முழுவதும் 2500 முதல் 3000 தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதாகவும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 200 தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டு வருகின்றன. ஆனால் தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.



திருவாரூர், நாகை மாவட்ட மக்கள் பெரும்பாலானோர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து விதமான சிகிச்சைகளுக்கும் வந்து செல்கிறார்கள். அதுபோல் கொரோனா தடுப்பு ஊசி போடுவதற்கும் இந்த மருத்துவமனைக்கு வரும் நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக தடுப்பூசிகளை வழங்கி கூடுதல் செவிலியர்களை நியமித்து தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.