தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வரும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை அவரது கடுமையான பணிகளுக்கு இடையே ஒரு மாலை நேரத்தில் சந்தித்தோம். அதிகாரிகளுடன் அடுத்தடுத்து ஆலோசித்தபடியும், சமீபத்திய சூழலை கண்காணித்தபடியும், புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிக்கை குறித்து விவாதித்தப்படியும்,  வியர்க்க விறுவிறுக்க ஓடிக்கொண்டிருந்தவர், தனக்கு கிடைத்த அந்த ஓய்வு நிமிடத்தில் நமக்காக நேரம் ஒதுக்கி நேர்காணல் அளித்தார். இதோ இனி அவரிடம் முன்வைத்த கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்...



 


கேள்வி :  பேரிடர் என்றாலும், பெருந்தொற்று என்றாலும் நீங்க இருந்தா சமாளிச்சிடுவீங்கனு மக்கள் நம்புறாங்க... கொரோனா உச்சகட்டத்தில் இருக்கு... உண்மையில் தமிழகத்தின் நிலை தான் என்ன?


(சிரித்தபடி தொடங்குகிறார்)


பதில் :  எந்த பேரிடர்களையும் நாம் ஒன்றோடு ஒன்று ஒப்பிடமுடியாது.  கும்பகோணம் தீ விபத்தில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவமாக இருக்கட்டும், நாகையில் சுனாமி வந்த பிறகு என்னை அரசு அங்கு அனுப்பிய நிகழ்வாக இருக்கட்டும் எல்லாமே டோட்டலி டிபரண்ட் இஸ்யூஸ். இந்த பேண்டமிக் பொருத்தவரை உலகமே ஒரே நேரத்துல பாதிக்கப்பட்டிருக்கு. இந்த நேரத்துல பொதுமக்கள் பங்களிப்பு மிக மிக அவசியமானது. நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அவர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டால்தான் இந்த கொரோனா பரவலை தடுக்க முடியும். தமிழ்நாட்டில் நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை பார்த்தால் இந்திய அளவில் 8வது இடத்தில் உள்ளோம். ஆனா இது திருப்தி அளிக்க கூடிய பதிலாக நான் கருதவில்லை.


கேள்வி : இந்த அளவிற்கு கொரோனா பரவ தேர்தல் பரப்புரை கூட்டங்கள் காரணமா ?


தேர்தல் மட்டுமே காரணமில்லீங்க, ஆனால் அதுவும் ஒரு காரணமா இருக்கலாம். கர்நாடகாவுல நம்மைவிட இரட்டிப்பான கேஸ் இருக்கு. சத்தீஸ்கர், மத்திய பிரதேஷ், உத்தரபிரதேஷ் அங்கெல்லாமும் தேர்தல் இல்ல. ஆனால், அங்கு நம்மைவிட கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக இருக்கு. இது என்னன்னா... ஒரு பக்கம் உருமாறிய கொரோனாவின் தாக்கம், இன்னொரு பக்கம் கொரோனா எல்லாம் கட்டுக்குள் வந்துவிட்டது என நினைத்து மாஸ்க் போடாம இருந்தது, கூட்டம் கூட்டமா கும்பலா எல்லோரும் ஒன்று சேர்ந்து கூட்டம், நிகழ்ச்சி என நடத்தியதுதான் இந்த சவாலான நிலைக்கு காரணம்.


கேள்வி : நீங்க சொல்ற உருமாறிய கொரோனா தொற்றுதான் இந்த அளவு பாதிப்பை ஏற்படுத்த காரணமா ? உருமாறிய கொரோனா என்றால் என்ன?


பதில் : கொரோனா அப்டிங்கிறது ஒரு RNA வைரஸ்ங்க, இந்த வைரஸ் அப்பப்போ தன்னோட சர்வைவலுக்காக ஜெனட்டிக்ல கொஞ்சம் மாற்றம் அடைந்துக்கொண்டே இருக்கும். அந்த மாதிரி வழக்கமாவே நடக்கும். இதுல ஒரு வகைதான் இந்த உருமாறிய வைரஸ். ஆனா இத பத்தி மக்கள் கவலைப்படாம தங்களை தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.


கேள்வி : பொதுமக்கள் மாஸ்க் அணியாமல் இருந்தது, தனிமனித இடைவெளியை கைவிட்டது மட்டும்தான் இந்த பரவல் அதிகரித்ததற்கு காரணமா ? அரசின் தடுப்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டது காரணமில்லையா ?


பதில் : இல்லங்க, இந்த மாதிரியே அரசு மீது குற்றச்சாட்டு சொல்லிகிட்டு இருந்தா ரிசல்ட் வராதுங்க. பல்வேறு துறைகள் தேர்தல் பணிக்கு போனாங்க. பல்வேறு கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடந்தது.  எப்படி இது மாறுச்சுன்னா... அக்டோபரில் தசரா, தீபாவளி, டிசம்பரில் கிறிஸ்துமஸ், அப்பறம் புத்தாண்டு, பொங்கல், ஜல்லிக்கட்டுனு அடுத்தடுத்து கொண்டாட்டங்கள். அதுல எல்லோரும் கும்பலா கலந்துகிட்டதெல்லாம் காரணம்.  அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் வருகிறது. ஆனால், எல்லா இடங்களிலும் தேசிய அளவில் ஒரு சுணக்கம் ஏற்பட்டது உண்மை அதை மறுக்க முடியாது.


கேள்வி : தமிழகத்தில் நிலைமை கைமீறி போய்விட்டது என உயர்நீதிமன்றத்தில் அரசு கூறியதே? உண்மையில் கைமீறிதான் போய்விட்டதா ?


பதில் : இல்ல, அது உண்மையில்லீங்க... அட்வகேட் ஜெனரல் பொதுவாக டெல்லி உள்ளிட்ட மாநிலங்களை சொல்லி ஒரு கருத்தை பதிவு செய்யும்போது அது தவறாக பொருள் கொள்ளப்பட்டுவிட்டது. அன்றைய தினம் தலைமை நீதிபதி என்னை வரச்சொல்லி என்னுடைய கருத்தை கேட்டு, நீதிமன்றத்தில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மட்டும் கேட்டார்கள். தமிழகத்தில் நிலைமை இன்னும் நமது கையை மீறியெல்லாம் போய்விடவில்லை என்பதை தெளிவுப்படுத்திவிட்டோம்.


கேள்வி : கொரோனாவின் கோரத்தாண்டவம் வரும் நாட்களில் மிக பயங்கரமாக இருக்கும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் கூட மத்திய அரசு சொல்லியிருக்கிறதே ?


பதில் : நானும் டிவியில பார்த்தேங்க. இனிமேலும் பொதுமக்கள் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லையென்றால் நோய் பரவலை கட்டுப்படுத்துவதென்பது சிரமம். நான் சொல்றேங்க இதுதான் எதார்த்தம். அதை உணர்த்தும் வகையில் கூட மத்திய அரசு இதுபோல கூறியிருக்கலாம். ஆனால், பொதுமக்கள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இது நீயா நானா என போட்டி போடும் தருணம் இல்லீங்க. அத மொதல்ல மக்கள் புரிஞ்சுக்கனும்.




கேள்வி : கோவிட்ஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் கோவாக்சினோ அல்லது கோவாக்சின் போட்டவர்கள் கோவிட்ஷீல்டோ இரண்டாவது தவணையாக போட்டுக்கொள்ளலாமா ?


பதில் : எந்த தடுப்பூசியை முதலில் போடுறாங்களோ, அதே தடுப்பூசியைதான் இரண்டாவது முறையும் போடனும்ங்கிறது தான் பாலிசி.


கேள்வி : இந்த கோவிட்ஷீல்ட் அல்லது கோவாக்சின் தமிழகத்தில் போட்டவர்களில் யாருக்காவது பக்க விளைவுகள் ஏற்பட்டிருக்கிறதா ? அப்படியெனில் எத்தனை பேருக்கு என்ன மாதிரியான விளைவுகள் ஏற்பட்டிருக்கிறது ?


பதில் : மாநிலம், மாவட்ட வாரியாக இந்த தடுப்பூசி பக்க விளைவுகளை கண்காணிக்க கமிட்டி இருக்கு. ஒன்னு வந்து சிவியர்னு சொல்லுவோம். இன்னொன்னு மைல்டுனு சொல்லுவோம். தடுப்பூசி போட்டு உடனே  இறப்பு என்ற நிகழ்வுகள் எல்லாம் எதுவும் இல்லை. இதுவரைக்கும் சிவியர்  பக்க விளைவுகள் யாருக்கும் ஏற்படலை. 


கேள்வி : சென்ற வருடம் கொரோனா தாக்கம் இருந்தபோது சித்த மருந்துகள், குறிப்பாக நிலவேம்பு, கபசுர குடிநீர் கசாயம் எல்லாம் பருக சுகாதாரத்துறையே அறிவுறுத்தியது. ஆனால், இப்போது அதை கண்டுகொள்வதாக தெரியவில்லையே?


பதில் : இல்ல, இல்ல... அதெல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. விளம்பரங்கள் கம்மியா இருக்கலாம். அதையும் சொல்லி அதிகப்படுத்த சொல்றோம். சென்னையில் இதற்கென பிரத்யேகமாக ஒரு சித்த மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது.


கேள்வி : செவிலியர்கள், மருத்துவர்கள் அதிகம் தேவைப்படுற இந்த சூழலில், பல இடங்களில் செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருவதாக எல்லாம் புகார் வருகிறதே ?


பதில் : ஒப்பந்த பணியில் இருந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுவிட்டது. பணியில் இருந்து போனவர்களையும் மீண்டும் சேர்த்துக்கொள்ள ஆணையும் பிறப்பிக்கப்பட்டுவிட்டது.


கேள்வி : மே 2க்கு பிறகு ஊரடங்கிற்கு வாய்ப்பிருக்காது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையெல்லாம் கொடுத்திருக்கிறாரே ?


பதில் : சாரிங்க, நான் நிர்வாக ரீதியாக பதிலைதான் தரமுடியும், அரசியல் சார்ந்து எதுவும் சொல்ல முடியாது


கேள்வி : சரி சார். முழு ஊரடங்கிற்கு மீண்டும் இப்போது வாய்ப்பிருக்கிறதா? வாய்ப்பில்லை என சொல்லிவிட்டு திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? ஏற்கனவே இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் தானே ?


பதில் :  முழு ஊரடங்கு அமல்படுத்துறது என்பது நோய் தொற்று பரவலின் அடிப்படையிலும், இப்போ எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் தரும் ஒத்துழைப்பை வைத்து தான் முடிவு செய்ய முடியும். இந்த கேள்விக்கு இப்போ நேரடியாக பதில் சொல்ல முடியாது


 கேள்வி : தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் இறப்புகள் மறைக்கப்படுவதாக குற்றச்சாடுகள் உள்ளதே ?


பதில் ; இல்லை. அது உண்மையில்லை. எந்த உயிரிழப்புகளையும் அப்படி மறைக்க முடியாது.


என்று கூறி, அடுத்தகட்ட ஆய்வு பணிக்கு தயாராகி நம்மிடம் விடைபெற்றார்.