புதுச்சேரி : பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் வசிக்கும் கெவீன் (வயது 30) தனது பூர்வீகமான புதுச்சேரியை தனது மனைவி ஈம்மாவுக்கு காண்பிக்க வேண்டும் என்ற கனவை நினைவாகும் விதமாக பாரீசிலிருந்து பைக்கில் புறப்பட்டு 23,000 கி.மீ தாண்டி பூர்வீக ஊர் புதுச்சேரியை அடைந்த பிரான்ஸ் ஜோடி!
பாரீசிலிருந்து பைக்கில் பூர்வீக ஊர் புதுச்சேரிக்கு வந்த பிரான்ஸ் ஜோடி
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் வசிக்கும் கெவீன் (வயது 30) தனது பூர்வீகமான புதுச்சேரியை தனது மனைவி ஈம்மாவுக்கு காண்பிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்கியுள்ளார். கெவீனின் பூர்வீகம் புதுச்சேரி வெங்கட்டா நகர். தாய் தந்தையர் தலைமுறையாக பிரான்சில் வாழ்ந்தாலும், மனத்தின் ஓரத்தில் எப்போதும் சொந்த ஊர் புதுச்சேரி பற்றிய பாசத்தை தாங்கியிருந்தார்.
ரூ. 20 லட்சம் மதிப்புள்ள யமஹா பைக்கில் பயணம்
ஒருநாள் தனது இளம் மனைவி ஈம்மாவிடம், “எனது பூர்வீகமான புதுச்சேரியை உனக்குக் காண்பிக்கணும், அதுவும் பைக்கில் போய் பார்க்கணும்,” என்று கூறிய கெவீனுக்கு, ஈம்மாவும் உடனே சம்மதம் தெரிவித்தார். இதுவே ஒரு கனவுப் பயணத்தின் தொடக்கமாக அமைந்தது. ரூ. 20 லட்சம் மதிப்புள்ள யமஹா பைக்கில் வரைபடத்தை மடித்து எடுத்துக்கொண்டு, கடந்த ஜூலை மாத முதல் வாரத்தில் பாரீசில் இருந்து புறப்பட்ட இருவரும், ஐரோப்பாவின் குளிர்காற்றை வென்றவாறு பயணத்தைத் தொடங்கினர்.
இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைகள், ஸ்லோவேனியாவின் பசுமை பள்ளத்தாக்குகள், குரோஷியாவின் கடற்கரை அழகுகள், கிரீஸின் நீல வானம், துருக்கியின் வெப்பமான சாலைகள் என பல நாடுகளை கடந்தனர். இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டதால், சில நாட்களுக்கு பயணம் நிறுத்தப்பட்டாலும், அவர்கள் கனவு நிற்கவில்லை. பைக்கை விமானம் மூலம் டில்லிக்குக் கொண்டு வந்து, அங்கிருந்து மீண்டும் புதுச்சேரியை நோக்கி புறப்பட்டனர்.
உறவினர்கள் உற்சாக வரவேற்பு
மொத்தம் 23,000 கிலோமீட்டர் தூரத்தை 5 மாதங்களாக மழை, வெயில், பனி, புயல் அனைத்தையும் கடந்து சென்ற பிறகு, கெவீன் – ஈம்மா ஜோடி நேற்றுமுன்தினம் புதுச்சேரி நிலத்தில் கால்வைத்தனர். அவர்களில் வெங்கட்டா நகர் பகுதியை அடைந்தபோது, உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்த நிமிடம் கெவீனின் கண்களில் கண்ணீரும் பெருமையும் கலந்து ஒளிர்ந்தது.
புதுச்சேரியும் பிரான்சைப் போலவே அழகாக உள்ளது!
புதுச்சேரியின் கலாசாரம், உணவு, மொழி அனைத்தும் ஈம்மாவை கவர்ந்துவிட்டது. “புதுச்சேரி பற்றி கெவீன் சொன்னதை நம்பவில்லை. ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகுதான் உண்மை புரிந்தது. புதுச்சேரியும் பிரான்சைப் போலவே அழகாக உள்ளது,” என ஈம்மா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இருவரும் நினைவுகள் நிரம்பிய இதயத்துடன் டிசம்பர் மாதத்தில் விமானம் மூலம் பாரீசுக்கு திரும்பவுள்ளனர்.
புதுச்சேரியை தனது மனைவி ஈம்மாவுக்கு காண்பிக்க வேண்டும் என்ற கனவை நினைவாகும் விதமாக கெவீன் பாரீசிலிருந்து பைக்கில் புறப்பட்டு 23,000 கி.மீ தாண்டி பூர்வீக ஊர் புதுச்சேரியை அடைந்த இளம் தம்பதியரின் இந்த அற்புதமான பயணம் புதுச்சேரி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுதியுள்ளது.
- பயண தூரம்: 23,000 கி.மீ
- பயண காலம்: 5 மாதங்கள்
- பயண வாகனம்: யமஹா பைக்
- பயண பாதை: பாரீஸ் – இத்தாலி – ஸ்லோவேனியா – குரோஷியா – கிரீஸ் – துருக்கி – டெல்லி – புதுச்சேரி