கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு சேலம் மாவட்டம் மேட்டூர் தம்பதியர் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இதில் டெபாசிட் செய்த ரூ 2.27 கோடி மோசடி செய்ததாக பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்,


 




சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 2.27 கோடி திரும்ப பெற்று தரக்கோரி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக நுழைவாயிலில் முன்பு 20க்கும் மேற்பட்ட பெண்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். கரூர் மாவட்டம் புகலூர் பகுதியைச் சேர்ந்தவர் வனஜா. இவர் நேற்று இருபதுக்கும் மேற்பட்ட பெண்களுடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பு அலுவலக வாயிலில் அமர்ந்து தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்று தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த கோபிநாதன்.




அவரது மனைவி பென்டார் ஜெனிஃபர் ஆகியோர் கடந்த 2018 இல் சந்தித்து அவர்களுடைய நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் பத்து மாதத்தில் இரண்டு மடங்கு பணம் தருவதாக கூறினார். அதை நம்பி 30க்கும் மேற்பட்டவர்கள் ரெண்டு கோடியே 27 லட்சம் ரூபாயை முதலீடு செய்தோம். ஆனால் அவர்கள் கூறியபடி பணத்தை திருப்பித் தரவில்லை. எனவே, முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்று தர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


 




பின்னர், காவல்துறை கண்காணிப்பு அலுவலக போலீசார் வனஜா உள்ளிட்ட பெண்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.