காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் இன்று முதல்  (டிசம்பர் 23 ஆம் தேதி) முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், அமைந்துள்ள அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில் , காஞ்சிபுரம் புத்தகத் திருவிழா (2022 ) நடைபெற உள்ளது. இதற்காக முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அரங்குகள் தயார் நிலையில் உள்ளன.




 

 

100 அரங்குகள், மிக பிரம்மாண்டம்

 

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த  புத்தகத் திருவிழாவில் சுமார் 100 அரங்குகளுடன் நடைபெற உள்ளது. தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், புத்தகத் திருவிழாவிற்கு 12 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை 10 மணிக்கு துவங்கும் இந்த புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை விழா, இரவு 9 மணி வரை நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக புத்தக கண்காட்சியில் , சுமார் 2 லட்சம் புத்தகங்கள் வரை வைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


 

 

புத்தக கண்காட்சி நிகழ்வுகள்

 

முதல் நாளான( இன்று ) 23ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு தொடக்க நாள் நிகழ்வுகள் நடைபெறுகிறது, இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு ,க. செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க. சுந்தர் , சி.வி.எம். பி. எழிலரசன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். புத்தக திருவிழாவை சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொள்கிறார். மேலும் பல்வேறு தலைப்புகளுக்கு முக்கிய பிரபலங்கள்,  கருத்துரைகள் வழங்க உள்ளனர்.  மனித சக்தி, ஊக்கமது கைவிடேல், சிகரங்களை நோக்கி ,உண்டு தீர்த்தோம் பொழுது பார்ப்போம், மனமே கவனம், நவீன சமூகமும் சுகாதாரமும், யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட தலைப்பின் கீழ் பல்வேறு முக்கிய அறிஞர்கள் மற்றும் பிரபலங்கள் கருத்துரைகள் வழங்க உள்ளனர்.

 





கலந்து கொள்பவர்கள் யார்..?

 

24-ஆம் தேதி எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், 25 ஆம் தேதி சுந்தர ஆவடியப்பன், 26 ஆம் தேதி நீயா நானா கோபிநாத் , 27 ஆம் தேதி விஜய் டிவி ஈரோடு . மகேஷ், 28 ஆம் தேதி முனைவர் கு. ஞானசம்பந்தம் ( பட்டிமன்றம்) , பாரதி பாஸ்கர், 29ஆம் தேதி சுகி. சிவம், 30 ஆம் தேதி பர்வீன் சுல்தானா மற்றும் எழுத்தாளர் கவிப்பித்தன், 31ஆம் தேதி காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன்,  ஜனவரி 01 தேதி கு .சிவராமன், ஜனவரி 02 ஆம் தேதி, திண்டுக்கல் ஐ. லியோனி  உள்ளிட்டோர் கலந்துகொண்டு  சிறப்பிக்க உள்ளனர்.



 

சிறப்பம்சங்கள்

 

100 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன, தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது,  மக்களை கவரும் வண்ணம் உணவரங்கம், கோளரங்கம் உள்ளிட்டவை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



 

கவரும் மணல் சிற்பம்

 

மேலும் பொதுமக்களை கவரும் வகையில் செல்பி பாயிண்ட் மற்றும் காஞ்சி உலகப் புகழ்பெற்ற கைலாசநாதர் கோயில் மணல் சிற்பமாக உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த கஜேந்திரன் என்பவர் இந்த மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார்.