அறுபடை வீடுகளுள் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் தரிசனத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை, மேலும் ஆடி மாதத்தில் கொரோனா விதிமுறை காரணத்தினால் ஆடி வெள்ளி உள்ளிட்ட தினங்களில் அனுமதி இல்லாத நிலை இருந்தது.
இதனை தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை முதல் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் தினந்தோறும் சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கடலிலும் நாழிக்கிணற்றிலும் புனித நீராட தடை உள்ள நிலையிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் செளந்தர்யா தனது கணவர் விசாகனுடன் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோயிலில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளில் சுமார் 2 மணி நேரம் தனது கணவருடன் கலந்து கொண்ட அவர், கோவில் சுற்றுப்பிரகாரத்தை வலம் வந்த பின்னர் கோயில் யானை தெய்வானைக்கு பழம், வெல்லம், கரும்பு உள்ளிட்டவைகளை வழங்கி ஆசிர்வாதம் பெற்று வேண்டுதலை நிறைவேற்றினார். தனது தந்தையும் நடிகருமான ரஜினிகாந்த் பூரண நலம் பெறவும் ஆரோக்கியத்துடன் நீண்டநாள் வாழ வேண்டியும் சிறப்பு பூஜைகளை செய்தார்.
இதனை தொடர்ந்து தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் மூலவர், சண்முகர், சூரசம்ஹார மூர்த்தி சன்னதியில் சுவாமி தரிசனம் செய்த ராஜேந்திர பாலாஜி எப்போதும் போல் செய்தியாளர் சந்திக்காமல் கிரேட் எஸ்கேப் ஆனார். ராஜேந்திரபாலாஜி உடன் முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன் உள்ளிட்டோரும் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
ஒரே நேரத்தில், ஒரே நாளில் தமிழ்நாட்டின் பிரபலங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், பரபரப்பாக பேசப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்தது பலரின் கவனத்தை பெற்றது. அதே நேரத்தில் ராஜேந்திரபாலாஜி தனது முகத்தை மூடி மறைந்து செல்ல முயலவில்லை. அணிந்திருந்த மாஸ்க்கை விலக்கி, அனைவரையும் பார்த்து வணங்கியபடியே கோயிலில் தரிசனம் செய்தார். இன்னும் சொல்ல வேண்டுமானால், ஜாலியாக கோயிலுக்குள் வலம் வந்தார். டில்லி பயணம், பாஜக இணைப்பு, வழக்கு முறையீடு என பரபரப்பாக பேசப்பட்ட ராஜேந்திரபாலாஜி, கூலாக திருச்செந்தூரில் பயணம் செய்ததும், வழிபாடு நடத்தியதும், அதே நாளில் ரஜினிகாந்த் மகள் வந்ததும் அரசியல் ரீதியாக ஒப்பீடு செய்ய வேண்டியதில்லை என்றாலும், அதிலும் ஒரு விதமான அரசியல் இல்லாமல் இல்லை.