வீடு, நிலத்தை எழுதி வாங்கிக்கொண்டு தங்களை பராமரிக்காமல் வீதியில் தவிக்கவிட்ட மகன்களிடம் இருந்து, சொத்துக்களை மீட்டுத்தருமாறு வயதான தம்பதி கண்ணீருடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த, மேல்சோழங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (85). இவர் விவசாயி. அவரது மனைவி சின்னம்மாள் (75). இவர்களுக்கு, திருமணம் ஆகி 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.


இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இதனால் முதியவர் மாணிக்கம் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார் , தங்களுக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளனர் . ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சாகுபடி செய்ய முடியாமல் முதுமை காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தம்பதி இருவரும், சிரமப்பட்டு வருகின்றனர்.




அடிப்படை வசதிகளான உண்ண உணவு ,உடுத்த உடை , மருத்துவ செலவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவையை நிறைவேற்றி கவனித்துக்கொள்ள இவர்களுடைய மகன்கள் காத்தவராயன்,சங்கர் ஆகியோர் உறுதி அளித்துள்ளனர். அதனை நம்பிய முதியவர் மாணிக்கம், தன்னுடைய உழைப்பின் மூலம் சம்பாதித்து சேர்த்த வீடு, 5 ஏக்கர் நிலம், கிணறு ஆகியவற்றை அவருடைய 2 மகன்களுக்கும் சென்ற பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி கடலாடி பத்திரப்பதிவு  அலுவலகத்தில் தான செட்டில்மெண்ட முல பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.


அதனை தொடர்ந்து , சொத்துக்களை பெற்றுக்கொண்ட மகன்கள். இருவரும் தங்களுடைய பெற்றோரை பராமரிக்காமல் கைவிட்டுள்ளனர். மேலும், அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளனர். , முதியவர்கள்  இருவரும் வீதியில் தங்கியிருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முதியவர் மாணிக்கம் அவரது மனைவியுடன்  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர்  முருகேஷிடம்,  காலில் விழுந்து தண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார்.




மேலும் வீடு உள்ளிட்ட சொத்துக்கள் அனைத்தையும் பெற்றுக்கொண்டு தங்களை பராமரிக்காமல் வீதியில் தவிக்கவிட்ட மகன்களிடம் இருந்து சொத்துக்களை மீட்டுத்தர வேண்டும். தான செட்டில் மெண்ட் பத்திரப்பதிவை ரத்து செய்து, மீண்டும் தங்களுடைய பெயருக்கு சொத்துக்களை மாற்றிட வேண்டும்' என்று கூறினர்.


அதைத்தொடர்ந்து, அதிகாரிகள் மூலம் நேரடி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அவர்களிடம் உறுதியளித்தார். தான செட்டில்மெண்ட் ரத்து செய்ய முடியுமா? இது குறித்து வழக்கறிஞர் சங்கரிடம் கேட்டபோது, இதே போன்று கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பகுதியை சேர்ந்த பெற்றோரின் சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு, சோறுபோடாமல் தவிக்கவிட்ட மகன்களிடம்  இருந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு இதற்கு முன்புபாக இருந்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி சொத்துக்களை மீட்டு கொடுத்துள்ளார்.




பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் செட்டில்மெண்ட் பத்திரப் பதிவின் கீழ், தான செட்டில்மண்ட் ரத்து செய்து, மீண்டும் பெற்றோரிடம் சொத்துக்கள் ஒப்படைக்கப்பட்டன. இந்த சம்பவத்தின் எதிரொலியாக, தான செட்டில்மெண்ட் எழுதும்பொழுது நிபந்தனையையும் பதிவு செய்யும் வசதியை பத்திரப்பதிவுத்துறை அறிமுகப்படுத்தியது. ஆனால், பெரும்பாலான பெற்றோர்களின்  பெருந்தன்மை காரணமாக, நிபந்தனையை பதிவின்போது குறிப்பிடுவதில்லை எனக் கூறினார்.