அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்தை விட அதிகமாக 73 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்சஒழிப்புத்துறை கூறியுள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக 7 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் தமிழ்நாடு லஞ்சஒழிப்புத்துறையில் புகார் கூறியிருந்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் வேறு வேறு தீர்ப்புகளை வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து, மூன்றாவது நீதிபதி நிர்மல் குமார் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணை வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜரானார். அப்போது அவர், தற்போது விசாரணை செய்து வரும் லஞ்சஒழிப்புத்துறை, ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக 73 சதவீதம் சொத்துகள் சேர்ந்த்திருப்பதாக கண்டறிந்துள்ளது என்று கூறினார். மேலும், ஆரம்பகட்ட விசாரணையை வைத்து முடிவெடுக்க முடியாது என்றும், மேல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதனைத்தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கவும், எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்யவும் ராஜேந்திரபாலாஜி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
ராஜேந்திர பாலாஜி, கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவகாசி தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக அரசின் செய்தி மற்றும் சிறப்புப் பணிகள் செயலாக்கத் துறை அமைச்சராக பணியாற்றினார். மீண்டும் 2016 ஆண்டு சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் மீண்டும் தமிழக அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இருப்பினும், ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக பிளவிபிட்ட பின்புதான் ராஜேந்திர பாலாஜி அநேக வெகுஜன மக்களுக்கு தெரிய வந்தார். எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்த அவர், பாஜகவின் கருத்தை பிரதிபலிக்கும் விதமாக பேசி வந்தார்.
திமுகவின் ஹிட்லிஸ்டில் இருந்த அவர், கடந்த 2021ம் அண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் படுதோல்வி அடைந்தார். இதனையடுத்து, கடந்த காலங்களில் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமடைந்தது.
சில தினங்களுக்கு முன்னதாக இவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "முந்தைய காலங்களில் அரசியல் உணர்ச்சி மிகுந்து சில தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளேன். அதற்காக வருத்தம் அடைந்து அரசியலில் பக்குவமாக தற்போது செயல்பட்டு வருகின்றேன்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.