தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத அத்தியாயம். தமிழ் சினிமாவின் சகாப்தம். இன்றும், என்றும் ஆட்சிக்கு முன்னுதாரணம்... எம்.ஜி.ஆர்! 


‛இங்கு ஊமைகள் ஏங்கவும்... உண்மைகள் தூங்கவும்... நானா பார்த்திருப்பேன்...’ என சாட்டை வீசிய எம்.ஜி.ஆர்.,யை நம்பி, அவருக்காக உயிரை  கொடுக்க, உணர்வு கூடிய ரசிகர் படை இருந்தது. அது தான் அவரது அடித்தளம். அந்த கட்டமைப்பு தான், அவர் திமுக என்கிற பெருங்கட்சியை உதறி வெளியேற நம்பிக்கை தந்தது. அவர் மக்கள் நாயகனாக இருந்தார். மக்களோடு இருந்தார். 



தன்னிடம் வந்தவர்களை கண்டு அவர் விலகிச் செல்லவில்லை. மாறாக, நெருங்கி அணைத்தார். தொட்டு தூக்கினார், தூக்கி கொஞ்சினார். அது தான் எம்.ஜி.ஆர்.,யை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்டியது. 

எம்.ஜி.ஆர்., நடிகராக, அரசியல் வாதியாக, முதல்வராக பல படிகளை கடந்தவர். அவரது படிக்கட்டுகள் உயரமாக இருந்தாலும், அவரது எண்ணமும், செயலும் மக்களுடனான தளத்திலேயே இருந்தது. தொட்டதெல்லாம் துலங்கிய எம்.ஜி.ஆர்.,யை ஒரு பெருங்கூட்டம் எப்போதும் சுமந்து கொண்டே இருந்தது. கடைசி வரை அதை அவர் தக்க வைத்தார்; அவர்களும் தாங்கிக் கொண்டே இருந்தனர். ‛எம்ஜிஆர் படுத்துக் கொண்டே ஜெயித்தார்...’ என்பார்களே... அதெல்லாம் இப்படி தான் சாத்தியமானது.



அரசியலாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும் அதில் நாகரீகம் கடைபிடித்தவர் எம்ஜிஆர். கொள்கையை கடந்து மக்களே கொள்கை என்கிற தத்துவத்தை கட்டிப்பிடித்துக் கொண்டவர், கடைபிடித்துக் கொண்டவர். 

இலங்கையின் நாவலப்பிட்டி என்கிற கிராமத்தில் மருதூர் கோபாலன் மேனன் ராமச்சந்திரன் என பிறந்து, தமிழ்நாட்டில் நடிகராக, தயாரிப்பாளராக, இயக்குனராக, எழுத்தாளராக, அரசியல்வாதியாக தனி இடம் பிடித்தவர். அவர் புல்லில் நடந்து அரியணை ஏறியவர் அல்ல... புயலை கடந்து பதவியில் அமர்ந்தவர். 

1977 முதல் 1987 வரை எம்ஜிஆர் ஆண்டு தான் கூற வேண்டும். ஒரு புதிய கட்சியை ஸ்தாபித்து, தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்த எம்.ஜி.ஆர், அவர் மறைந்த பிறகும் ஸ்தாபித்திருக்கிறார். இங்கு புதிதாய் வரும் கட்சிகள் எல்லாம், ‛எம்ஜிஆர் ஆட்சியை தருகிறோம்...’ என்கிறார்கள். 

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தன்னை கருப்பு எம்ஜிஆர் என்றே அடையாளப்படுத்திக் கொண்டார். அரசியலுக்கு வரவில்லை என்றாலும், வருவேன் என்றபோதெல்லாம் ‛எம்ஜிஆர் ஆட்சி தருவேன்..’ என்று தான் ரஜினியும் கூறினார். ‛எம்.ஜி.ஆர்., நீட்சி நான்...’ என்றார் மநீம தலைவர் கமல். தமிழகத்தில் தாமரையை மலரச் செய்வோம் என கூறிவரும் பாஜக கூட, வேல் யாத்திரையின் போது, ‛எம்ஜிஆர் ஆட்சியை பாஜக தான் தரும்...’ என்றார்கள். 




இப்படி இங்கு எந்த அரசியல் ஆரம்பமும் எம்ஜிஆர் பெயரை உச்சகரிக்காமல் உதயமானதில்லை. புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், எங்கள் தங்கம், வாத்தியார், மக்கள் தலைவர் என பட்டங்களை அவருக்கு மக்கள் சூட்டியிருந்தாலும், அவற்றுக்கு பின்னால் வரும் எம்ஜிஆர் என்கிற வார்த்தை தான், பட்டங்களை பெருமைப்படுத்தியது. இருந்த வரை இமயமாகவே இருந்தார். இறந்த பிறகும் இதயமாக இருக்கிறார். 

1987 டிசம்பர் 24ம் தேதியான இன்று, தமிழ்நாடே ஸ்தம்பித்த நாள். ஆம்... இன்று தான், மக்கள் தலைவர் எம்ஜிஆர், மக்களை விட்டு பிரிந்து மண்ணை விட்டு பிரிந்து மெரினாவில் துயில் கொண்ட நாள். இன்றும் அவரது கடிகார சத்தம் கேட்பதாக நினைவிடத்தில் காது வைத்து கேட்பவர்கள் உண்டு. அங்கு சிலர் கடிகார முள் சத்தம் கேட்பதாக கூறுவார்கள். பலர்,அதை எம்ஜிஆர்.,யின் இதயத்துடிப்பாக எண்ணி துடித்துப் போவார்கள். அங்கிருந்து சத்தம் வருகிறதா... இல்லையா... என தெரியாது... ஆனால் அது எம்ஜிஆர்., நேசிப்பவர்கள், ‛என் தலைவன் இன்னும் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கிறான்’ என்கிற நம்பிக்கையின் ஒலியாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. 

‛‛மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா...

மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு
மாலைகள் விழவேண்டும் - ஒரு
மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்...!’’

இந்த பாடல் வரிகள் தான் எம்ஜிஆர்!