கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என டிடிவி தினகரன், ஓ .பன்னிர்செல்வம் நடத்திய ஆர்ப்பாட்டத்தை, முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். 


கோடநாடு பங்களா விவகாரம் 


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் பங்களா ஒன்று இருந்தது. இங்கு அவ்வப்போது அவர் சென்று ஓய்வெடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு உயிரிழந்த பிறகு அங்கு யாரும் செல்லாத நிலையில், 2017 ஆம் ஆண்டு அங்கிருந்த காவலாளியை கொன்று பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


முதலில் இந்த சம்பவத்தில் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இதில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். முந்தைய அதிமுக அரசு, விசாரணை நடத்தி வந்த நிலையில், ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. தற்போது வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 


இப்படியான நிலையில் கொடநாடு விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி இன்று தமிழ்நாடு முழுவதும் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக - டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக தொண்டர்கள் கண்டன ஆர்ப்பார்ட்டம் நடத்தினர். இதில் தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ் - டிடிவி தினகரன் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். 


விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார்


ஓபிஎஸ் அன்றைக்கு சசிகலா, டிடிவி தினகரனை எதிர்த்து அம்மாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கும்ன்னு சொல்லி அவர்கள் சார்ந்த குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தம் செய்தார். அதன்பிறகு டிடிவி தினகரனை சந்தித்து அவர் காலில் விழுந்தார். இப்படியான நிலையில் ஓ.பன்னீர்செல்வம் எப்படிப்பட்ட சந்தர்ப்பவாத அரசியலை செய்கிறார் என்பது அதிமுக தொண்டர்களுக்கும், தமிழ்நாடு மக்களும் உணர்ந்திருக்கிறார்கள். திரை மறைவில் சந்தித்து கொண்ட ஓபிஎஸ் -டிடிவி தினகரன் பொதுவெளியில் சேர்ந்தார் போல காட்சியளிக்க இந்த ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளனர். அதற்கான கதையாக கோடநாடு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்கள். 


இந்த ஆர்பார்ட்ட நாடகத்தில் கோடநாடு விவகாரத்தில் விரைவாக விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பது அவர்களின் கூற்றாக உள்ளது. இந்த விவகாரத்தில் குற்றம் நடந்தவுடன் குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய வழக்குப்பதிவு செய்தது முந்தைய அதிமுக அரசு. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் கொரோனா தொற்றால் வழக்கு விசாரணை தாமதமானது. இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட வேண்டிய நேரத்தில் ஆட்சி மாற்றம் நடந்தது. 


இந்த வழக்கு மேற்கு மண்டல ஐஜி தலைமைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அவர் 890 பக்க விசாரணை அறிக்கையை நீலகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் திடீரென்று இந்த வழக்கை திமுக அரசு சிபிசிஐடிக்கு மாற்றியது. இப்போது ஏஎஸ்பி தலைமையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஏன் 90 சதவிகித விசாரணை முடிந்த பிறகு விசாரணை முந்தைய அதிகாரியை விட பதவி குறைந்தவர்களிடம் கொடுக்கப்பட்டது என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.