இந்தியாவில் இதுவரை முன்னெப்போதும் இல்லாத வகையில், முதன்முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் ஒரே நேரத்தில் ஆளுநர்களாக செயல்பட உள்ளனர். 


ஆளுநரான பாஜக தலைவர்கள்:


தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019- ஆம் ஆண்டு முதல் தெலங்கானா ஆளுநராகப் பதவி வகித்து வருகிறார். அதைதொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு  முதல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. அவரை தொடர்ந்து, தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான இல. கணேசன்  கடந்த 2021ம் ஆண்டு மணிப்பூரின் ஆளுநராக நியமிக்கப்பட்டதோடு, கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு பெற்றார். தற்போது அவர், நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.


ஆளுநரானார் சி.பி. ராதாகிருஷ்ணன்:


மேற்குறிப்பிட்ட வரிசையில் தமிழக பாஜகவின் தலைவர் பதவியை வகித்த மற்றொரு நபரான சி.பி. ராதாகிருஷ்ணனை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இந்திய வரலாற்றில் முதன்முறையாக, ஒரே காலகட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் ஆளுநர்களாக செயல்பட உள்ளனர்.


ஆளுநர் பதவி வகித்த தமிழர்கள்:


அளுநர் பதவி வகித்த தமிழர்கள் பட்டியலில், தமிழிசை சவுந்தரராஜனுக்கு முன்னதாகவே 8 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் பலர் அரசியல் பின்புலம் கொண்டவர்களாகவும், நீதித்துறை சார்ந்தவர்களாகவும் இருந்துள்ளனர். அந்த பட்டியல் பின்பவருமாறு:



  • தமிழகத்தை சேர்ந்த ஜோதி வெங்கடாச்சலம் கேரள மாநில ஆளுநராக 1977ம் ஆண்டு முதல் 1982ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

  • பா. ராமச்சந்திரன் 1982ம் ஆண்டு முதல் 1988ம் ஆண்டு வரை கேரள ஆளுநராக செயல்பட்டார்

  • சி. சுப்ரமணியம் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக 1990ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை பதவி வகித்தார்

  • மிசோரம் மாநிலத்தின் ஆளுநராக பத்மநாபன் என்பவர் 1998ம் ஆண்டு முதல் 2000-ஆவது ஆண்டு வரை செயல்பட்டார்

  • எம்.எம். ராஜேந்திரன் ஒடிஷா மாநிலத்தின் ஆளுநராக 1999ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை பதவி வகித்தார்

  • அண்டை மாநிலமான தெலங்கானாவின் ஆளுநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த இ.எஸ்.எல். நரசிம்மா 2014 முதல் 2019ம் ஆண்டு வரை ஆளுநராக செயல்பட்டார்

  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் 2014 முதல் 2019ம் ஆண்டு வரை கேரள ஆளுநராக  பணியற்றினார்

  • 2015ம் ஆண்டு அருணாச்சலபிரதேச ஆளுநராக பொறுப்பேற்ற சண்முகநாதன், அடுத்தடுத்து மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆளுநராகவும் சேவையாற்றினார்


மேற்குறிப்பிட்ட அனைத்து நபர்களும் வெவ்வேறு காலகட்டங்களில் ஆளுநர்களாக செயல்பட்ட நிலையில், தற்போது தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர்களாக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், இல. கணேசன் மற்றும் சி.பி. ராதகிருஷ்ணன் ஆகியோர் ஒரே நேரத்தில் வெவ்வேறு மாநிலங்களில் ஆளுநர்களாக செயல்பட உள்ளனர்.